
* குழந்தைகளின் ஆறு, ஏழு மாதங்களில் இருந்தே, தின்பண்டங்கள், பொம்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் பாக்ஸில் எக்ஸ்ட்ரா இரண்டு பிஸ்கட்கள், சாக்லேட்கள் வைத்துவிட்டு, ‘உன் ஃப்ரெண்டு யாராச்சும் கேட்டா ஷேர் பண்ணு’ என்று சொல்லி அனுப்புங்கள். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை தலைமைப்பண்புடன் விளங்க, இந்தச் சிறு தொடக்கம் நிச்சயம் கைகொடுக்கும்.
* மூன்று வயதுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக்கொடுங்கள். தினமும் அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுத்து உண்டியலில் சேமிக்கச் சொல்லலாம். அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு, பெற்றோர் அனுமதியுடன் அவர்களுடைய சேமிப்புப் பணத்தை எடுத்தே செலவு செய்ய அனுமதிக்கலாம். பணத்தின் மதிப்பை உணர்வதால், பார்க்கும் பொருள்களையெல்லாம் அடம்பிடித்துக் கேட்டு வாங்கித் தரச் சொல்லும் பழக்கம் அவர்களை அண்டாது.
* குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே புத்தகங்களை நண்பர்களாக்குவது அவசியம். அவர்களின் வயதுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, ஒரு குட்டி ஜீனியஸ் உருவாக ஆரம்பிப்பான்/ஆரம்பிப்பாள்.
* இரண்டு வயதுக்குள், அவர்களுக்கு டாய்லெட் ட்ரெய்னிங் கொடுத்திருக்க வேண்டும். சாப்பிடும் முன், விளையாடிய பின் கைகளைக் கழுவுவது, இரு வேளை பல் துலக்குவது மற்றும் குளிப்பது என்று ஆரோக்கிய விஷயங்களையும் வளர வளரக் கற்றுக்கொடுங்கள்.
* 10 வயதுக் குழந்தைகளுக்கு, ‘ஓர் இடத்திலோ அல்லது யாரிடமோ பேசும்போது, நீ மட்டுமே பேசாமல், மற்றவர்கள் சொல்வதையும் உள்வாங்க வேண்டும்’ என்று வலியுறுத்துங்கள். அதேபோல, குழந்தைக்கு அதுவரை தெரியாத ஒரு விஷயம் பற்றிய பேச்சு வந்தால், ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்காமல், புதிய விஷயங்களைக் கவனித்துக் கேட்க அறிவுறுத்துங்கள்.
* உணவு உண்ணும்போது சிந்தாமல், மிச்சம் வைத்து வீணாக்காமல் இருக்கப் பழக்கப்படுத்துங்கள். பொது இடங்களில் சாப்பிடும்போது ஸ்பூன், ஃபோர்க், டவல் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ‘டேபிள் நாகரிகம்’ பற்றிக் கற்றுக்கொடுங்கள்.
* மற்றவர்களின் அறைக்குச் செல்லும் முன்பும், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியைக் கேட்க வேண்டும் என்ற நாகரிகத்தைச் சொல்லிக்கொடுங்கள்.
* மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் விதையுங்கள். அழகு, அறிவு, பொருளாதாரம் என எதன் அடிப்படையிலும் அடுத்தவர்களின் மனது புண்படும்படி அவர்களைத் தாழ்த்திப் பேசுவது தவறு என்பதைச் சொல்லிக்கொடுப்பதன் மூலம், உங்கள் குழந்தையை மனித நேயத்துடன் வளர்த்தெடுக்கலாம்.