ஊர்வனவற்றில் மனிதன் அதிகம் அச்சப்படுவது பாம்புக்குத்தான்.எனினும் இயற்கையின் படைப்பில் அந்த உயிரினங்கள் தங்கள் வாழ்வு முறையைத்தான் பின் பற்றுகின்றனவே தவிர மனிதனை இம்சிப்பதற்காக அவை படைக்கப்படவில்லை. அவற்றில் தனித்துவம் வாய்ந்தவை பறக்கும் பாம்புகள்! பெயர்தான் இப்படியே தவிர உண்மையில் இப்பாம்புகள் பறப்பதில்லை!
பார்ப்பதற்குப் பறப்பது போல் இருந்தாலும், காற்றில் சறுக்கிச் செல்கின்றன. இப்பாம்புகள் உயரமான மரக்கிளைகளிலிருந்து உயரம் குறைவான் மரக்கிளைக்குத் தாவிச் செல்லும் தன்மை கொண்டவை. இரைகளைப் பிடிப்பதற்காகவும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் இவை இப்படிக் காற்றில் சறுக்கிச் செல்கின்றன.
கிரைசோபிலியா என்ற பேரினத்தைச் சேர்ந்த இந்தப் பாம்புகளில் ஐந்து வகை உள்ளன. தெற்காசிய வெப்ப மண்டல மழைக்காடுகளில் வசிக்கும் இப்பாம்புகள் இரண்டு அடி முதல் நான்கு அடி நீளம் வரை வளரக்கூடியவை! பல்லிகள், பறவைகள் உள்ளிட்ட சிறிய உயிரினங்களை உணவாகக் கொள்ளும்.
இந்த அரிய உயிரினம் பற்றியும் அவை பறந்து செல்லும் விதம் பற்றியும் உயிரியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். காற்றில் சுமார் நூறு அடி தூரம் வரை தனது உடலை நெளித்து பேலன்ஸ் செய்தபடி பாம்பு பறந்து செல்வது எப்படி என்ற கேள்வி பலகாலமாக இருந்து வருகிறது.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வெர்ஜீனியா பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் அண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆய்வாளர் ஜேக்úஸாச்சா தன் குழுவினருடன் இணைந்து பாம்பு பறக்கும் ரகசியம் பற்றி ஆய்வு செய்தார். 3 டி பிரிண்டர் உதவியுடன் இந்தப் பாம்பின் உடலின் குறுக்கு வெட்டுத் தோற்றம் போன்ற ஒரு பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கப்பட்டது. நீரோட்டம் உள்ள ஒரு தொட்டியில் அதை வைத்தபோது நீரின் ஓட்டத்திற்கு ஏற்ப அப்பொருள் விரிந்தும், சுருங்கியும் மாற்றமடைந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அதன்படி இவ்வகைப் பாம்புகள் தங்கள் விலா எலும்புகளை குறுக்கியும் விரித்தும் உடலைப் பறப்பதற்கு ஏற்ற வகையில் அதிவேகமாக மாற்றிக் கொள்கின்றன என்றும், இந்த விசேஷ பண்பால்தான் அவற்றால் காற்றில் சறுக்கிச் செல்ல முடிகிறது என்றும் ஜேக்úஸாச்சா கூறுகிறார்.
பாம்பு பறக்கும் ரகசியத்தைக் கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள் இயற்கையின் இந்த அற்புதத் தொழில்நுட்பத்தை நவீனச் சாதனங்களில் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
தலைக்கு மேலே பாம்பு பறந்து வருவதைப் பார்க்க நேர்ந்தால் நம் கதி என்ன? என்று யோசிக்கலாம்.
இப்பாம்புகளின் விஷம் மனிதனைக் கொல்லும் அளவு ஆபத்தானது அல்ல. தவிர அதன் அருகில் சென்றால் உங்களுக்குப் பயந்து அது சறுக்கிச் செல்லுமே தவிர மனிதர்களை நோக்கிச் சறுக்கி வராது எனறும் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.