மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 1 August 2023

வேலூர் காட்டும் தேசிய ஒருமைப்பாடு..

      வேலூரில் பல்வேறு மாநில மக்கள் சாதி, மதம், பேதம் கடந்து ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைய வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி, வரலாற்று ஏடுகளில் உன்னத நிகழ்வை பதிவு செய்துள்ளது.

      நகரின் வடக்கே வேங்கடம், கிழக்கே வங்க கடல், தெற்கே தென்பெண்ணை, மேற்கே பவளமலை எல்லையாக அமைந்த "தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து" என்பது போல மருத்துவம், கல்வி, ஆன்மிக சான்றோர்களால் பெருமை அடைந்தது வேலூர். இங்குள்ள சி.எம்.சி. மருத்துவமனை இந்திய அளவில் பிரசித்திப்பெற்றது.


       இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் மருத்துவவசதி வேண்டி வேலூர் நோக்கி விமானம், ரெயில், பேருந்து, ஆட்டோ மூலம் ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 77ஆயிரத்து 500 பேர் நிகழ் நிலையில் முன் பதிவு செய்து வருகிறார்கள். வருவதற்கும், சிகிச்சை பெறுவதற்கும், தங்கள் இருப்பிடம் செல்வதற்கும் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்து முடித்து விடுகின்றனர். குறிப்பாக வருடத்தில் தமிழகத்தில் மட்டும் 55 ஆயிரம் பேர், மேற்கு வங்கத்தில் இருந்து 13 ஆயிரம் பேர் மற்றும் பல்வேறு மாநிலத்தாரும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். இவர்கள் தங்கும் விடுதிக்காக செலவிடும் பணம் ஒரு விடுதிக்கு ரூபாய் 200 முதல் 1000 வரை ஒரு நாளைக்கு செலவிடுகின்றனர். குடும்பமாகத் தங்கினால் கூடுதல் பணம் செலவாகிறது.


      அவ்வாறு மருத்துவச் சிகிச்சைக்காக வரும் மக்கள் வேலூர் மையப் பகுதியில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் தங்கி மருத்துவம் செய்ய வசதியாக மருத்துவமனை அருகே சுமார் 5 கி.மீ. பரப்பில் உள்ள டாக்டர் ஐடா ஸ்கடர் ரோடு, காந்தி ரோடு, சுக்கையா வாத்தியார் தெரு, காசி விஸ்வநாதர் கோவில் தெரு, மெயின் பஜார், பாபுராவ் தெரு, தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெரு, கிரவுன் தியேட்டர் பின் பக்கம், காகிதப்பட்டரை, நைனியப்பன் நாய்க்கன் தெரு, சாரதி நகர், தென்றல் நகர், சி.எம்.சி. காலனி, தமிழ்நாடு வீட்டு வசதி பகுதி 1,2,3,4,5 ஆகிய பகுதிகளில் தங்கி மருத்துவச் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பிட்ட காலம் வரை இவர்கள் தங்கி இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுச்செல்ல வசதியாக சத்துவாச்சாரியில் ஒரு சிலர் வாடகைக்கு வீடு கொடுக்கின்றனர். இந்த வீட்டில் குடும்பத்துடன் தங்குவதற்கு தேவையான மேஜை, நாற்காலிகள், கட்டில், கியாஸ் உள்ளிட்ட வசதிகளையும் செய்தே கொடுக்கிறார்கள். ஒரு சிலர் வாடகைக்கு எடுக்கும் வீட்டில் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே வாங்கி கொண்டு ,வீட்டை காலி செய்யும் போது பொருட்களை பாதி விலைக்கு விற்றுச்சென்று விடுகின்றனர்.

     அதனால் எப்பொழுதும் ஆற்காடு சாலை மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் உணவகங்கள் அதிகமாக உள்ளது. வேலூர் மக்களைப் பற்றி எதுவும் தெரியாமல் வருகிறார்கள், அவர்கள் தங்கள் மொழிகளில் பேசுகிறார்கள், ஆனாலும் இவர்களை சுற்றியுள்ள மக்களும் இவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு, முதலியவைகளை தெரிந்துக் கொள்கின்றனர். அவர்கள் மொழிகளையும் எளிதாக கற்றுக்கொண்டு விடுகின்றனர். வெகு நீண்ட காலம் தங்கி மருத்துவச் சிகிச்சை பெற உள்ளதால் தங்கள் களைப்பை போக்க, வேலூர் அருகே உள்ள ஸ்ரீபுரம் தங்ககோவில் சென்று சக்தி அம்மாள் அருளை பெறுகின்றனர். அரசு அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோவில், ரத்தினகிரி பாலமுருகன் கோவில் சென்று பாலமுருகனையும் வள்ளி தெய்வானையும் வணங்கி அருள் பெருகின்றனர். சுமார் 110 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி அருளையும் பெறுகின்றனர்.


     தமிழக தலைநகர் சென்னை, மெரினா கடற்கரை, மகாபலிபுரம் பாண்டவர் கற்கோவில், புதுச்சேரி சுற்றுலா தலங்களைக் கண்டு மகிழ்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை சத்துவாச்சாரி புவனேஸ்வரி மகாலில் மேற்கு வங்கத்தை சார்ந்தவர்கள் துர்கா பூஜை விழாவை பெரும் விமர்சையாக கொண்டாடுகின்றனர்.


       வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, சோயா பீன்ஸ், முட்டைகோஸ், இளநீர், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, பச்சைப்பட்டாணி முதலிய காய்கறிகள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றது. பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து வருபவர்கள் சுக்கா ரொட்டி, சப்பாத்தி, பருப்பு டால், சப்ஜி முதலிய உணவு வகைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் இருந்து வருபவர்கள் அரிசி சாதம் விரும்பி உண்கின்றனர்.


    மருத்துவச் சுற்றுலா மூலம் வேலூருக்கு நிரந்தர வருவாய்க் கிடைக்கிறது. வேலூரில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் படிப்பறிவு இல்லாதவராக இருந்தாலும் இந்தி உருது, மராட்டியம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, பஞ்சாபி என 21 மொழிகளை சரளமாக பேசுகின்றனர். பாலாற்றில் கிடைக்கும் சுவையான குடிநீர், வேலூர் கோட்டை அகழியினால் கிடைக்கும் குடிநீர், காவிரி ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் ஆகியவற்றால் போதிய தண்ணீர் கிடைக்கிறது, சுத்தமான குடிநீர் மற்றும் உணவு விலை மலிவாகக் கிடைப்பதால் வெளிமாநில மக்களை வேலூர் மாநகரம் கவர்கிறது.


    இதனால் வேலூர் மாநகருக்கு வெளிமாநில மக்கள் வருகை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. இதற்கு காரணம் வி.ஐ.டி. பல்கலைக்கழகம், ஸ்ரீபுரம் தங்க கோவில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், சி.எம்.சி. மருத்துவமனை ஆகியவைகளால் இந்தியாவில் உள்ள எல்லா தரப்பு மக்களும் வேலூருக்கு வருகின்றார்கள். பல்வேறு மதம், மொழி, சாதி, பண்பாடு, கலாசாரம் கொண்ட மக்கள் வேலூரில் வசிப்பதால், தேசிய ஒருமைப்பட்டுக்கு எடுத்துக்காட்டாக வேலூர் விளங்குகிறது இது அனைவருக்குமே பெருமை சேர்ப்பதாகும்.

Pages