சித்திர நாட்டிலிருந்து அரவநாட்டுக்கு நடைபயணம் மேற்கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும் எப்படியோ வழிதவறிவிட்டார்கள். மேற்கொண்டு எவ்வழியாகச் செல்வதென்று தெரியாமல் தவித்தார்கள்.
பொழுது இறங்கத் தொடங்கியிருந்தது! கார்மேகங்கள் வேறு திரண்டு கொண்டிருந்தன. காற்றும் வேகமாக அடித்தது! மின்னல்கள் வேறு!
"அண்ணா.. இப்போ நாம என்ன பண்றது, மழை வரப் போகுது.'' என்றான்.
"இரு.. எங்காவது ஒதுங்க இடம் கிடைக்குதான்னு பார்ப்போம்.'' என்ற மூத்தவன் சுற்றி முற்றிப் பார்த்தான். எந்த இடமும் சரியானதாகத் தோன்றவில்லை.
"மின்னல்கள் இப்படி உக்கிரமாக வெட்டிக் கொண்டிராமல் இருந்தால்கூட ஏதாவதொரு மரத்தின் அடியில் நின்றுகொள்ளலாம். இப்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது!...''
மழை கொட்டத் தொடங்கியது!
சகோதரர்கள் இருவரும் குழப்பம் மிகுந்து காணப்படுகையில், அவர்களுக்குக் குறுக்காக வேகமாகப் பாய்ந்து சென்றது ஒரு நரி. சிறிது தூரம் சென்றதும் மழையில் இவர்கள் நனைவதைப் பார்த்தது!
நரி, அவர்களை நோக்கி, ""நீங்க.. காட்டுக்குப் புதுசா ? இங்க எப்படி வந்தீங்க.?'' என்று கேட்டது நரி.
தம்பி பயந்துபோய் அண்ணணின் முதுகுக்குப் பின் மறைந்துகொண்டான். அண்ணணுக்கும் பயம்தான்! இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நிலைமையை விளக்கினான்.
அந்த நரி, "சரி.. அப்போ என் குகை பக்கத்துலதான் இருக்கு.. ராத்திரி அங்கேயே தங்கிட்டுப் பொழுது விடிஞ்சதும் புறப்படுங்க.'' என்று கூறியது.
அவர்கள் தயங்கினார்கள். ஒரு நரியை நம்பிச் செல்வதா? நள்ளிரவு அயர்ந்து உறங்கும்போது மேலே விழுந்து குதறத் தொடங்கிவிட்டால்..?
ஆனால், வேறு வழியில்லாததால் நரியின் உதவியை அரை மனதாக ஏற்றுக்கொண்டார்கள்.
மூவரும் நரியின் குகைவாசலை அடைந்தார்கள். நரி தன் ஈரம் படர்ந்த உடம்பைச் சிலுப்பிக் கொண்டே உள்புறமாகச் சென்றது.
சகோதரர்களும் மெதுவாக உள்ளே நுழைந்தார்கள்.
"தம்பி.. நாம காலையில புறப்படுற வரைக்கும் கவனமா இருக்கணும். நரியோட தந்திரங்களைப் பற்றி நெறையா கேள்விபட்டிருக்கோமே.. ஞாபகம் இருக்கா?''
"ஆமாண்ணா .. நல்லாவே தெரியும்.''
"அதேதான்.. அது நம்மல எங்கேயாவது படுத்துத் தூங்கச் சொன்னா, எக்காரணத்தைக் கொண்டும் ரெண்டு பேரும் தூங்கிறக் கூடாது. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முழுச்சிருந்து காவல் காக்கணும். சரியா ?''
"ம்ம்ம்.. சரிண்ணா!''
அப்போது அங்கே வந்த நரி, தன் மனைவியையும் இரு மகன்களையும் அறிமுகப்படுத்தியது. அவர்கள் மூவரும் அந்தச் சகோதரர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். உறங்குவதற்கு இடம் ஒதுக்கியிருந்த மூலையைச் சுட்டிக்காட்டியது நரி.
"அங்கேயா? ஏன் அவ்ளோ ஓரமாவா?'' என்றான் அண்ணண்.
"இங்க நெருப்பு வெக்கச் சுள்ளிகள் இல்ல.. அங்க கொஞ்சம் வெதுவெதுப்பா இருக்கும்.. அதான்!'' என்றது நரி.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"வழக்கமா என்னோட பெரிய பையன் அங்கதான் படுப்பான்.. ஆனா, அவனே உங்களுக்கு அந்த இடத்தைக் கொடுத்துட்டான்...'' என்று சொல்லிவிட்டு குகையின் வேறொரு பகுதிக்குச் சென்றது நரி.
உடனே சகோதரர்கள் இருவரும் தங்கள் திட்டத்தின்படி செயல்பட ஒருவர் மாற்றி ஒருவர் விழித்திருப்பதற்கான நேரத்தை முடிவுசெய்து, அதன்படி நடக்கலானார்கள்.
நள்ளிரவு. காவலிருக்க வேண்டிய தம்பி அண்ணணைப் போலவே தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது, ‘ திடும் திடும் ‘ என்ற சத்தம் கேட்டு அலறி எழுந்தான் மூத்தவன். அருகில் தம்பி உறக்கத்தில் ஆழ்ந்திருந்ததைப் பார்த்துக் கோபமுற்றாலும், அவனை எழுப்ப முற்படவில்லை. தானே வருவதைச் சமாளித்துவிடுவதென்று முடிவுசெய்து கைக்கு எதாவது அகப்படுகிறதாவெனத் துழாவினான். அந்த மையிருட்டுச் சூழலில் ஒரு சிறு தடி சிக்கியது. இதை வைத்து எப்படியாவது நரிகளைத் தாக்கிவிட்டு, தம்பியை எழுப்பி வெளியே அழைத்துச் செல்வதெனத் தீர்மானம் செய்துகொண்டான்.
நரியின் காலடி ஓசையை உற்றுக் கேட்டுக்கொண்டே சுவர் போல இருந்த பாறையை ஒட்டி நின்றான்.
நரி மெதுவாகச் சென்று தம்பியைத் தொட்டதும் , சினம்கொண்ட அண்ணண், நரியின் காலைத் தாக்க வேகமாகத் தடியால் அடித்தான். ஆனால், நரி விலகிவிட்டது. அடி தரையில் விழுந்தது!
சத்தம் கேட்டு கண்விழித்த தம்பி, அருகே நரி நிற்பதைக் கண்டு கத்தினான். அவனுடைய கூச்சலைக் கேட்டு நரிக் குடும்பத்தினர் அனைவரும் அங்கே வந்து கூடிவிட்டார்கள்!...
இப்போது நரிகள் ஒருபுறமும் சகோதரர்கள் மறுபுறமுமாக நிற்க, அவ்விடம் போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது.
"வஞ்சக நரியே.. தங்கறதுக்கு இடம் கொடுக்கிற மாதிரி நாடகம் போட்டுட்டு, எங்களை மோசம் பண்ணப் பாக்குறியா?... மரியாதையா பின்னாடி போயிடுங்க!...'' பெண் நரி பற்களைக் கடித்துக்கொண்டு அவர்களை நோக்கிச் சினம் காட்டியது.
தம்பி மறைந்துகொண்டான்.
"என்னப்பா சொல்ற? நான் மோசம் செய்யறனா? இல்லவே இல்ல.. உங்களுக்காகச் சாப்பிடக் கொஞ்சம் உணவு கொண்டுவந்திருக்கேன். "
"பொய் சொல்லாத .. நீ எங்களைக் கொல்லத்தானே வந்தே ?''
நரி சத்தம் போட்டுச் சிரித்தது. அதன் குடும்பத்தினர் அனைவரும் கூடவே சிரித்தார்கள்.
"ஏன் எல்லாரும் சிரிக்கறீங்க?''
" எங்க தாத்தா சொன்னது ஞாபகம் வந்துச்சு.. அதான்!...'' என்றது நரி.
"என்ன சொன்னாரு ?''
"இந்தக் கால மனுஷங்க எல்லாம் பாவம். யாராவது வலிய வந்து உதவி செஞ்சா சந்தோஷப்படாம சந்தேகம்தான் படுவாங்கனு அடிக்கடிச் சொல்லுவாரு. சரியாதான் போச்சு!...'' என்றது நரி.
சகோதரர்கள் அமைதியாக இருந்தார்கள்.
நரி தொடர்ந்து பேசியது.
"நரிகள்னாவே நீங்க எல்லாரும் தப்பாத்தான் பார்க்கறீங்க.. தந்திரமானங்க நயவஞ்சகம் புடிச்சவங்கனு சொல்லி கதைகள் எல்லாம் உருவாக்கியிருக்கீங்க.. ஆனா, அது நீதிகளைப் புகட்டத்தானே ஒழிய, உண்மையில் நாங்க எல்லாரும் அப்படிப்பட்டவங்க இல்ல.. இப்பக்கூட நான் உண்மையிலேயே உங்களுக்காக அலைஞ்சு திரிஞ்சு உணவுதான் கொண்டு வந்திருக்கறேன். அதை சாப்பிடச் சொல்லத்தான் எழுப்ப முயன்றேன்!'' என்று சொல்லி உணவுப் பண்டத்தை ஒரு பாறை மேல் வைத்தது நரி.
அண்ணண் அமைதியாகச் சிந்திக்கலானான். அவன் பின்னால் ஒளிந்து நின்ற தம்பி, நரிகளின் மீதான பயம் நீங்கியவனாக வெளியே வந்தான்.
அதன் பிறகு, யாரும் எதுவும் பேசவில்லை.
சகோதரர்கள் நரி கொண்டு வந்த உணவைச் சாப்பிட்டு முடித்து உறங்கச் சென்றார்கள்.
இம்முறை அவர்களின் தூக்கத்தில் ஆழ்ந்த நிம்மதி இருந்தது.
நீதி : சந்தேகம் மிகவும் ஆபத்தானது.