சீகல்ஸ் பறவை
மழை மேகம் கூடும் போதும், மழை பொழியும் போதும், மயில்கள் நடனம் ஆடும் என்று அறிந்திருப்போம். மயில் மட்டுமல்ல; பல்வேறு பறவைகளும், மழை நேரத்தில் நடனம் ஆடும் என்பது உங்களுக்கு தெரியுமா...
கடற்கரைகளில் கிடைக்கும் கிளிஞ்சல்களை, உணவாக கொள்ளும் பறவை இனம், 'ஒய்ஸ்டர் கேச்சர்' தமிழில், இதை, 'கிளிஞ்சல் கொத்தி பறவை' என்பர்.
மழை நேரத்தில், இந்த பறவைகள், ஆனந்தமாக நடனம் ஆடும். வட்ட வடிவம் மற்றும் ஒரே நேர்கோட்டில் இணைந்து நின்று நடனம் ஆடும். பின், சிறிது நேரம் இடைவெளி விட்டு, மீண்டும் அதே போல நடனம் ஆடும். பலத்த மழை பொழியும் போதும்,பனி உருகும் போதும், இந்த பறவைகள் இப்படி நடனம் ஆடுவது வழக்கம்.
'சீகல்ஸ்' எனப்படும் கடற்பறவை, பலத்த மழை பெய்த பின், பாதங்களை, ஈரமான புற்கள் உள்ள தரையில், அடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, நடனம் ஆடும். இது போல, 'ரூக்ஸ்' எனப்படும், ஒருவகை காகம், மயில்கள், சிலவகை குருவி இனங்கள், மழை நேரத்தில், தரையில் குதித்து, நடனம் ஆடும். இவை, இப்படி, அடித்தும், உதைத்தும் நடனம் ஆடும் போது, பூமிக்குள் இருக்கும் புழுக்கள், அதிர்வு காரணமாக, மேல் பகுதிக்கு வரும்.
அப்போது, அவற்றை, இந்த பறவைகள் உணவாக உட்கொள்ளும். மேலும், மழை நேரத்தில், பூமிக்குள் தண்ணீர் இறங்கும். இதனால், பூமிக்குள் வசிக்கும் புழுக்களின் வளைக்குள், தண்ணீர் புகுந்து விடுவதால், அவை, பூமியின் மேல் பகுதிக்கு வரும். அந்த நேரத்தில், அவற்றை பறவைகள் உணவாக உட்கொள்ளும்.