இன்றைய குழந்தைகள் இரண்டு வயதிலேயே ப்ளே ஸ்கூலில் சேர்க்கப்படுகின்றனர். இரண்டரை வயது முதல் கேஜி வகுப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்து கொள்ள வேண்டியது அவசியம்.
* பயண தூரம் குறைவாக / வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது நலம். இதனால், அலைச்சல்/அசதியைத் தவிர்க்கலாம்.
* குழந்தைகளைத் தங்கள் அரவணைப்பில் மட்டுமே வைத்து வளர்க்கும் பெற்றோர், பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக அவர்களை நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று சில மணி நேரமாவது அழைத்துச் சென்று, அங்கிருக்கும் பெரியவர்கள், குழந்தைகளுடன் பழகவைக்க வேண்டும்.
* கிண்டர் கார்டன், கேஜி வகுப்புகளில் குழந்தைகளை மதிய வேளைகளில் சிறிது நேரம் உறங்க வைக்கலாம். எனவே, பள்ளி செல்வதற்கு முன்னர், வீட்டிலும் அவர்களை அதே நேரத்தில் உறங்கவைத்துப் பழக்கலாம்.
* ஆரம்பத்தில் சில வாரங்களுக்குக் குழந்தைகள் பள்ளி செல்ல மறுத்து அடம்பிடித்து அழுவது இயல்பானதே. அதுவே மாதங்களைக் கடந்தும் அழுகை தொடர்ந்தால், என்ன பிரச்னை என்பதைக் குழந்தையிடமும், பள்ளித் தரப்பிடமும் விசாரிக்க வேண்டும், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
* பென்சில், சாக்பீஸ் உள்ளிட்ட பொருள்களைக் கடிக்கும் மற்றும் சாப்பிடும் பழக்கம் (Pica) சில குழந்தைகளுக்கு இருக்கும். இதை முன்பே சரிசெய்ய வேண்டும். பள்ளித் தரப்பிடம் தெரிவித்துக் குழந்தைக்கு இந்தப் பழக்கம் இருக்கிறதா எனக் கண்காணிக்கச் சொல்லலாம்.
• தன் பார்வையில் படும் கவர்ச்சிகரமான பொருள்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது சில குழந்தைகளின் இயல்பு. இந்தப் பழக்கம் பள்ளியில் நிகழ்வது நல்லதல்ல. இதனால், பள்ளியில் சேர்க்கும் சில மாதங்களுக்கு முன்பே, செய்முறையுடன் விளக்கி, ‘இது தவறு’ எனக் குழந்தைக்குப் புரியும்படிப் பெற்றோர் தீர்க்கமாகப் புரியவைக்க வேண்டும்.
* சில குழந்தைகள் மற்றவர்களை அடிப்பது, கையில் உள்ளதைப் பிறரின் மீது எறிவது என்று மூர்க்கமாக இருப்பார்கள். பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகப் பெற்றோர், கதைகள், தொடர் உரையாடல்கள், தேவைப்பட்டால் கண்டிப்பின் மூலம் இவற்றையெல்லாம் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
* பசித்தால் சொல்லத் தெரிவது, தானே சுயமாகச் சாப்பிடுவது, சிறுநீர் மற்றும் மலம் வந்தால் பாத்ரூம் சென்று கழிப்பது, சளி வந்தால் கைக்குட்டை கொண்டு துடைத்துக் கொள்வது, சாப்பிடும் முன், பின் கைகளைக் கழுவுவது உள்ளிட்ட அவசியமான பழக்கங்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
* குழந்தையின் வயதுக்கு ஏற்றாற்போல, பெற்றோரின் மொபைல் எண், வீட்டு முகவரி ஆகியவற்றை மனப்பாடமாகச் சொல்லக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதேபோல, பெற்றோர் சார்பாக யாராவது தன்னைப் பள்ளியிலோ, வேறெங்கும் வெளியிடத்திலோ வந்து அழைத்தால், அவர்களிடம் பாஸ்வேர்டு சொல்லச் சொல்லிக் கேட்கப் பழக்க வேண்டும். (அந்த பாஸ்வேர்டை, ஏற்கெனவே பெற்றோர் குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்)
* வாரம் ஒருமுறை நகம் வெட்டுவது, குழந்தைக்குத் தொந்தரவு தராத வகையிலான ஹேர்கட் போன்றவை முக்கியம். பெண் குழந்தைகளுக்கு தொங்கட்டான், ஜிமிக்கி, செயின் போன்ற அணிகலன்கள் விளையாடும்போது/சண்டையிடும்போது இழுக்கப்பட்டு விபரீதமாக வாய்ப்புள்ளது என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.