சூரிய சக்தியில், மின்சாரம் தயாரிப்பது சுபலமாகி விட்டது. சோலார் அடுப்பு, சூரிய சக்தி கார் என, பல உபகரணங்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டன.
சூரிய சக்தியிலிருந்து, ஆற்றலை பிரித்தெடுத்தவர், மரியா டெல்கஸ். மத்திய ஐரோப்பாவில் உள்ள, ஹங்கேரி நாட்டில், புடாபெஸ்ட் நகரில், 1900 டிசம்பர் 12ல் பிறந்தார். அவரது தந்தை, அலதார்; தாய், மரியா லாபன்டி டெல்கஸ்.
சூரியசக்தி இல்லங்கள், சோலார் ஆய்வகங்கள் என, விரிந்த அவரது ஆய்வு, கடைசியில், சூரிய சக்தியால் எளிய முறையில், கடல் நீரை, குடிநீராக்கி ஆச்சரியமடைய வைத்தது.
புடா பெஸ்ட் பல்கலைக்கழகத்தில், 1924ல் முனைவர் பட்டம் பெற்றார். அங்கேயே, பேராசிரியர் ஆவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அமெரிக்காவில், உறவினர் வீட்டில் சில காலம் தங்கி வர, அனுப்பினார், அவரது தந்தை.
அமெரிக்கா, ஓஹியோ நகரில் உள்ள கிளினிக்கல் ஆய்வகத்தில், 1925ல் ஆய்வு விஞ்ஞானியாக வேலை கிடைத்தது. பல்கலைக் கழக ஆய்வகங்களில் நடைபெறும், கண்டுபிடிப்புகளை விட, தனியார் நிறுவனங்கள் சந்தையை பிடிக்க, உற்பத்தி தொடர்பாக நடத்தும் ஆய்வுகள், அதிகம் நடந்தன.
தலை சிறந்த விஞ்ஞானிகளை, தனியார் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தின. இது, அறிவியலை, அரசு ஆய்வகங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் வெளியே கொண்டு வந்து, சந்தை சம்பந்தப்பட்டதாக ஆக்கியது.
மனித செல் மாற்றவியல் மற்றும் செயற்கை இதய உதிரிப் பாகம் தயாரிப்பதில், 12 ஆண்டுகள் மரியா டெல்கஸ் கவனம் செலுத்தினார். பின், வாஷிங்டன், 'வெஸ்டிங் ஹவுஸ்' எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம், அவரை, அழைத்தது. அப்போது தான், முதல் முறையாக, சூரியனின் பக்கம், அவர் கவனம் திரும்பியது.
மின்சக்தி தொடர்பான ஆய்வின் போது, சூரிய சக்தியை, மின்சாரமாக மாற்ற முடியும் என்ற யோசனை வந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வெஸ்டிங் ஹவுஸ் ஆய்வகம், இந்த ஆலோசனையை ஏற்க மறுத்தது.
மாசசெட்டஸ் தொழில்நுட்ப ஆய்வகம், சூரிய ஆற்றல் பயன்பாட்டு செயல் திட்டத்தில் பங்கேற்க, 1939ல் அழைத்தது. அங்கு தான் சூரிய சக்தியை, மின் சக்தியாக மாற்றும் அரிய கண்டுபிடிப்பை, மரியா டெல்கஸ் நிகழ்த்தினார்.
சூரிய ஆற்றலை, வேதி ஆற்றலாக்கி, கிரிஸ்டலாக்கம் செய்து, சோடியம் சல்பேட் கலவையில் தேக்கி, மின்சாரமாக, பயன்படுத்துவது தான் ஆவரது ஆய்வு. இந்த கண்டுபிடிப்பின் மூலம், முதலில், சூரிய சக்தியால், மின்சாரம் பெற்ற வீடு, டோவர் இல்லம்.
மாசசெட்டஸ் அருகே, டோவர் எனும் இடத்தில், இன்றும் அது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆய்வு மாணவர்கள் பார்த்து செல்கின்றனர். இந்த சாதனை, 1948ல் நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் உலக யுத்த காலத்தில், சூரிய அடுப்பு, சூரிய சக்தி கடிகாரம் என, தொடர்ந்த அவரது கண்டுபிடிப்புகள், 'சூரிய சக்தி மகாராணி' என்ற பட்டப் பெயரை பெற்று தந்தது.
அடுத்த மாபெரும் கண்டுபிடிப்பை, 1952ல் நிகழ்த்தினார். சூரிய சக்தி மூலம், மிகவும் மலிவாக, கடல் நீரை, குடிநீராக மாற்றுதல்! உலகில் கிடைக்கும் மொத்த நீரில், 1 சதவீதம் மட்டுமே குடிநீராகும். மரியாவின் கண்டுபிடிப்பை, உலகமே போற்றுகிறது.
விண்வெளி ஆய்வகங்கள், தங்களுக்கு தேவைப்படும் மின் சக்தியை, அங்கிருந்தபடியே பெற முடியும் என்று, 1965ல் மற்றொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இது, விண்வெளி ஆராய்ச்சியில், புரட்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க பெண் பொறியாளர் விருது, உட்பட பல விருதுகளை பெற்ற அவர், 1995 டிசம்பர் 2ல் புடாபெஸ்ட் நகரில் காலமானார்.