மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 9 December 2018

முரட்டுக் குதிரையை அடக்கிய சிறுவன் யார் தெரியுமா?

     ஐரோப்பா கண்டத்திலுள்ள கிரேக்க நாட்டை, பிலிப் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவரை, பல்வேறு தேசத்தைச் சேர்ந்த, அரசர்களும், வியாபாரிகளும் சந்திப்பது வழக்கம். பிலிப்பின் தயாள குணத்தையும், வீரத்தையும் அறிந்த, கிரேக்க நாட்டு மக்கள், அவர் மீது, அளவு கடந்த பாசம் கொண்டிருந்தனர். 


     தேடி வருபவர்களுக்கு, தேவையான உதவிகளைச் செய்வதும், அவர்கள் அன்பளிப்பாக கொடுப்பதை முக மலர்ச்சியுடன் பெற்றுக் கொள்வதும், அரசர் பிலிப்பின் இயல்பு. 


        ஒவ்வொரு நாளும், அரசர் பிலிப்பின் அரண்மனையில் விருந்தினர் வரவாகவே இருந்தது.

         ஒரு நாள், அரசர் பிலிப்பைச் சந்திக்க, வெளி தேசத்திலிருந்து, வியாபாரி ஒருவர் வந்தார். வழக்கம் போல், அவருக்கு மிகப்பெரிய விருந்து கொடுத்தார் அரசர் பிலிப். விருந்து முடிந்ததும், கருப்புக் குதிரை ஒன்றை அரசர் பிலிப்புக்கு, பரிசாக கொடுத்தார் அந்த வியாபாரி.

        'இந்த குதிரை, எவருக்கும் அடங்காது; திமிர் பிடித்த குதிரை; அதனால், பார்த்து நடந்துக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, விடைபெற்றுச் சென்றார்.

        'அந்த, அடங்காத குதிரையை, அடக்கி விட வேண்டும்' என்று, அரசர் பிலிப் விரும்பினார். அதற்காக, தன் குதிரைப் படைவீரன் ஒருவனை, தேர்வு செய்தார். 'இந்த குதிரையை அடக்க, நீ தான் பொருத்தமான ஆள்; இதன் மீது ஏறி, சவாரி செய்து காட்டு...' என்றார்.

       குதிரையின் அருகில் சென்று ஏற முயன்றான் வீரன். அவனை, அந்த குதிரை அருகில் நெருங்கவே விடவில்லை. மற்றொரு வீரனுக்கு, அந்த குதிரையை அடக்கும் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. அவன் போராடி, குதிரையின் மீது அமர்ந்து, ஓட்டினான். 

      சிறிது நேரத்தில், அந்த குதிரை, அவனைக் கீழே தள்ளி விட்டது. மற்றொரு வீரனை, அந்த குதிரை, முள் செடியில் உரசி, கீழே தள்ளியது. இவை அனைத்தையும், அரசர் பிலிப்புடன், அவருடைய மகனும் பார்த்துக் கொண்டிருந்தான்.

       'எவராலும் அடக்க முடியாத, அந்த குதிரையை, நான் அடக்குறேன்...' என்றான் அரசரின் மகன்.

      'நீ சிறுவன்... அந்த குதிரையோ அடங்காப்பிடாரி... நம் வீரர்கள் முயன்று தோற்றதை நீயும் கண்டாய்... அதனால், உன்னால் முடியாது...' என்றார் அரசர் பிலிப்.

       'நான் சிறுவன் தான்; ஆனால், என்னால், அந்த குதிரையை அடக்க முடியும். மற்றவர்களால் முடியவில்லை என்றால், என்னாலும் முடியாது என்று, நீங்கள் முடிவுக்கு வந்தது தவறு... எனக்கு அனுமதி கொடுங்கள். அந்த அடங்காக் குதிரையை, நான் அடக்கி காட்டுறேன்...' என்றான் மகன்.

         வேறு வழியின்றி, மகனுக்கு, அனுமதி கொடுத்தார் பிலிப்.

       குதிரையின் அருகில் சென்றார் அரசரின் மகன்; அவனை வெறித்துப் பார்த்தது குதிரை. தயக்கமின்றி, குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தது குதிரை. அடுத்து, குதிரையின் பிடரியை, மெதுவாக வருடினான். 

      அப்போதும், குதிரை அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தது; சூரியனை நோக்கி, குதிரையை திருப்பி நிறுத்தினான்; அடுத்து என்ன நடக்கும் என்று, அரசர் பிலிப்பும், அமைச்சர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

      தாவிக் குதித்து, குதிரையின் மீது ஏறிய அரசரின் மகன், சூரியனை நோக்கி, குதிரையை விரட்டினார். குதிரையும் ஓடியது; வெகுநேரத்திற்குப் பின், அரண்மனைக்கு வந்தார் அரசரின் மகன். 

      'எவருக்கும் ஒத்துழைக்காத, அந்த குதிரை, அரசர் மகனுக்கு மட்டும் எப்படி ஒத்துழைத்தது' என்று, அனைவரும் ஆச்சரியப்பட்டனர். 

       அப்போது, 'அப்பா... அந்த குதிரை எல்லா குதிரையைப் போன்று, சாதாரணக் குதிரை தான். தன்னுடைய நிழலைப் பார்த்து மிரண்டு போய், அருகில் சென்ற வீரர்களை, அது ஏற்றுக் கொள்ளவில்லை. இதை அறிந்த நான், சூரியனைப் பார்க்கும்படி அந்த குதிரையை திரும்பி நிற்க வைத்தேன்...
'அப்போது, அதன் நிழல், அதற்கு தெரியவில்லை; அதே திசையில், குதிரையை விரட்டினேன். நிழல், தெரியாததால் ஒழுங்காக ஒத்துழைத்தது. குதிரையை, நான் அடக்கிய ரகசியம் இதுதான்...' என்றான். 
அவனுடைய புத்தி கூர்மையைக் கண்டு, அனைவரும் வியந்தனர்.

     இந்த நிகழ்ச்சிக்குப் பின், அந்த குதிரை, அரசர் மகனின் விருப்பக் குதிரையாயிற்று. உலக நாடுகள் பலவற்றை, அவர் கைப்பற்ற, பயணம் மேற்கொண்ட போது, அந்த கருப்புக் குதிரையான, 'யூசபாலஸ்'யில் தான் பயணித்தார்.

         அந்த வீரன் தான் உலக வரலாற்றில், மாவீரனாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் மாவீரன் அலெக்சாண்டர்.

Pages