சில மாணவர்கள், அதீத கடவுள் நம்பிக்கை உடையவர்களாய் இருப்பர். அதீத கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவோ அல்லது இல்லாதவர்களாகவோ இருப்பது அவரவர் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்தது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், அதீத இறை நம்பிக்கை கொண்ட சில மாணவர்கள் செய்யும் சில செயல்கள்தான் சிக்கலானவைகளாக உள்ளன.
சில ஆன்மீகம் சார்ந்த வார்த்தைகளை, பேப்பரில் 1,000 முறையோ அல்லது 10,000 முறையோ எழுதினால், தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நம்பி, படிக்கும் நேரத்தில், அதை மெனக்கெட்டு எழுதிக் கொண்டிருப்பார்கள். இதன்மூலம் அவர்களின் நேரம் வீணாவதோடு, சோர்வும் ஏற்படுகிறது.
தேர்வு நெருக்கத்தில், சிலர், முறையாக படிப்பதை விட்டுவிட்டு, வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வழிபாட்டு தலங்களிலோ அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருப்பர். அனைத்து மதத்தை சேர்ந்த மாணவர்களிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சில மாணவர்கள், இதுபோன்ற மனோநிலையைக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது, தான் ஒழுங்காக நேரத்தைப் பயன்படுத்தி, முறையாகப் படிக்காமல், இறைவனை அதிகமாக வணங்கிவிட்டால் மட்டுமே தனக்கு அதிக மதிப்பெண் வந்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் அந்த மாணவர்கள், தேர்வில் கோட்டை விடுகிறார்கள்.
தேவையான முயற்சிகளை எடுத்துவிட்டு, இறைவனை வழிபடுவதன் மூலம் மட்டுமே, நமக்கான பலன்கள் கிட்டும் என்பது பல அனுபவஸ்தர்களின் அறிவுரை.
எனவே, தேர்வு நெருக்கத்தில், படிப்பிற்கே அதிக நேரம் ஒதுக்குதல் நலம். ஆனால், அதற்கு பதிலாக, வழிபாட்டிற்கு அதிகநேரமும், படிப்பிற்கு அதைவிடக் குறைந்த நேரமும் ஒதுக்கினால், தெய்வம் நிச்சயம் நமக்கு உதவி செய்யாது.