மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 11 December 2022

முண்டாசு கவி பாரதியின் பிறந்த தினம் இன்று



         சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.



     தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.


       இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

      இவருடைய கவித்திறனை பாராட்டி 'பாரதி' என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.


        1882-ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்தார் பாரதி. தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.


     பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904-ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது.


       வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றி உள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இந்த நல்ல நாளில் அவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்வோம்....

Pages