அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு உரிய மனப்பான்மை வளர்த்து கொள்ளவேண்டும். குறிப்பாக தெருக்களை தூய்மையாக வைக்க உதவவேண்டும். மேலும் நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட்களை தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை கற்றுக்கொடுக்கலாம். செய்திதாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்பநலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய குறும்படங்களை பொதுமக்களிடம் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மாணவர்கள் அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் குறித்து விளக்கி கூறலாம். அதில் வேளாண்மை திட்டங்களில் அரசின் உதவி பெறுதல், விவசாயிகள் ஓய்வு நேரத்தில் கோழிப்பண்ணைகள், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல் உள்ளிட்ட தொழில்கள் செய்வது குறித்து அறிவுரைகளை வழங்கலாம்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க உதவலாம். நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மாணவர்கள் போலீசாருக்கு உதவிட முன்வரவேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் உதவவேண்டும்.
ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவ வேண்டும். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அவற்றால் பாதிக்கும் மக்களுக்கு உதவிட வேண்டும். சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நல்ல மாணவர்களாக உருவாக வேண்டும்.