அமெரிக்க நாட்டுப் பெண்மணி ஒருவர் சுவாமி விவேகானந்தரை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். அழைப்பை ஏற்ற விவேகானந்தர் பெண்மணியின் வீட்டிற்குச் சென்றார்.
அந்தப் பெண்மணி விவேகானந்தரிடம், ""இறைவன் எல்லை கடந்தவர்!.... எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் என்கிறீர்கள்!.... ஆனால் அருவமாகிய பரம்பொருளுக்கு உங்கள் நாட்டில் உருவம் வைத்து வழிபடுகிறீர்கள்!..... எதற்காக?.... இதை எப்படி ஏற்பது?.... என்று கேட்டார்.
விவேகானந்தர் அப்பெண்மணியின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஒரு முதியவரின் ஓவியத்தைக் காட்டி, ""இது யார்?'' என்று கேட்டார்.
""அது என் தந்தையார்....'' என்று பதில் கூறினாள் அந்தப் பெண்மணி.
""வெறும் மரத்தாலான சட்டமும், சில வண்ணக் கலவைகளைக் கொண்டு எழுதிய ஓவியம்தானே அது?....உயிரற்ற ஒரு ஜடப் பொருள்தானே....அதெப்படி உன் தந்தையாராக இருக்க முடியும்?.....'' என்று கேட்டார்.
""சரி,....இது என் தந்தை அல்ல.... ஆனால் என் தந்தையை நினைப்பூட்டுகிற ஒரு புனிதமான அடையாளம் அல்லவா?...''
""அது போலத்தான்!.... எங்கள் நாட்டில் உள்ள விக்கிரகங்களும்!.... அவை இறைவனை நினைப்பூட்டுகிற,.... பக்தியோடு சிந்தையில் தாங்கி நிற்க.... ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களாகத் திகழ்கின்றன!....''
அந்தப் பெண்மணி விவேகானந்தரின் கருத்தைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக புன்னகை புரிந்தார்!