ஹசரத் அலி என்று ஒரு இஸ்லாமிய அறிஞர் இருந்தார். அவர் ஒரு சமயம் தொழுகைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து, "ஹசரத் அலி அவர்களே!.... ஒரு சந்தேகம்!.... பகுத்தறிவு என்றால் என்ன?....விதி என்றால் என்ன?'' என்று கேட்டார்.
ஹசரத் அலி யோசித்தார்.... சிறிது நேரத்திற்குப் பிறகு, " நீ உன் வலது காலைத் தூக்கு!....'' என்று கட்டளையிட்டார்.
கேள்வி கேட்டவர் தன் வலது காலைத் தூக்கியபடி நின்றார்.
ஹசரத் அலி அவரிடம், "சரி இப்போது நீ உன்வலது காலைக் கீழே இறக்காமல், இடது காலையும் தூக்கு!....'' என்றார்.
கேள்வி கேட்டவருக்குத் தூக்கிவாரிப் போட்டது!....
"என்ன இது? இப்படிக் கட்டளை இடுகிறீர்கள்?....அது எப்படி முடியும்? .... நான் கீழே விழுந்துவிடுவேனே!....... நான் உங்களிடம் கேட்ட கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?...'' என்று தவித்தார்.
அதற்கு ஹசரத் அலி, "சரிசரி.....நீ முன்போலவே வலதுகாலைக் கீழே இறக்கி சாதாரணமாக நில் பதில் சொல்கிறேன்!....'' என்றார்.
கேள்வி கேட்டவரும் அப்படியே வலதுகாலைக் கீழே ஊன்றிவிட்டு பதிலுக்குக் காத்திருந்தார்.
"உன்னால் ஒரு காலை மட்டும் தூக்க முடிந்தது அல்லவா....அதுதான் பகுத்தறிவு!....இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க முடியாத நிலை இருக்கிறது அல்லவா அதுதான் விதி!'' என்று கூறினார் ஹசரத் அலி!
_சிறுவர் மணி.