மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால், குட்டித் தூக்கம் வருவது இயற்கையே. உணவு செரித்தல் என்பதும் ஓர் உடலியக்கப் பணிதான்.
வயிறு நிறைய உணவு உண்ணும்போது, சுமார் 25 முதல் 50 சதவீதம் கூடுதல் ஆற்றலை செரிமானத்துக்காக உடல் பயன்படுத்துகிறது. எனவே, உணவு உண்டதன் காரணமாக சோர்வு ஏற்படலாம். இரண்டாவதாக, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உண்ணும்போது டிரிப்டோபென் (tryptophan) எனும் அமினோ அமிலம் சுரக்கும். இது செரோட்டோனின் (serotonin) எனும் நரம்பியல் உணர்வியைத் தூண்டும். இதன் காரணமாகவும் தூக்கம் ஏற்படலாம். மேலும், கூடுதலாக உண்டு இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால் இன்சுலினும் கூடுதலாகச் சுரக்கும். இதன் காரணமாக, போதிய உணவு உண்டுவிட்டோம் என்பதை உணர்த்தும் கொலெசிஸ்டகைனின் (cholecystokinin - CCK) சுரக்கும். இந்த நொதி மூளையில் தூக்கத்தைத் தூண்டும் பகுதியைத் தாக்கி தூக்கத்தை வரவழைக்கும்.
வயிறு நிறைய உணவு உண்டதும் தூக்கம் வருவது மதியம் மட்டும் அல்ல, இரவிலும் தான். இதே காரணங்களின் விளைவாகத்தான் இரவிலும் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.