அறிஞர் ஒருவர், ஒரு பள்ளிக்கூட இலக்கிய மன்ற விழாவுக்குப் பேசப் போனார்... மாணவர்களை ஒரு கேள்வி கேட்டார்.
"தாமரையின் உயரம் என்ன?"
ஒருவன் மற்றவனைப் பார்த்தான். அவன் அடுத்தவனைப் பார்த்தான். இது மாணவர்களின் டெக்னிக். அடுத்தவனை பார்த்துவிட்டால் கேள்வியை தூக்கி அவன் தலைமேல் போட்டதாக அர்த்தம்!
ஒரு மாணவன் உத்தேசமாக சொன்னான் : "தாமரையின் உயரம் இரண்டரை அடி".
அறிஞர் கேட்டார் : 'ஏன் நாலடி இருக்காதோ?"
பளிச்சென்று பையன் சொன்னான் : "வச்சுக்குங்க.. எனக்கென்ன? அது என்ன எங்க வீட்டுத் தாமரையா? உங்க வீட்டுத் தாமரையா?".
மாணவர்களோடு சேர்ந்து அறிஞரும் சிரித்தார். ஆனால், "ஒருவருக்கும் உண்மை தெரியவில்லையா?" என்று வருத்தத்தோடு கேட்டார்.
ஒரு புத்திசாலிப் பையன் எழுந்து சொன்னான் : "ஐயா, உங்கள் கேள்வி தவறு. தாமரைக்கு ஏது உயரம்? தண்ணீரின் உயரம் தான் தாமரையின் உயரம். தண்ணீர் மேலே போகப் போகத் தாமரை மேலே போகும். தண்ணீருக்கு மேலே இருப்பதுதான் தாமரையின் இலட்சியம்."
அறிஞர் மகிழ்ந்து மாணவரிடம் மீண்டும் ஒரு கேள்வி கேட்டார் : "சபாஷ்... வாழ்க்கையில் உன்னுடைய உயரம் என்ன?"
மாணவன் சொன்னான் :
"என்னுடைய உயரம்தான்... என் எண்ணத்தின் உயரம்".
இதைத்தான் திருவள்ளுவர்,
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
என்கிறார்.
பொருள்:
தாமரைத் தண்டின் நீளம், குளத்தின் நீர்மட்டத்தின் அளவிலேயே இருக்கும். அதுபோல மக்களின் உயர்வும் மனதில் இருக்கும் ஊக்கத்தின் அளவே ஆகும்.