“கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்”
கூத்தாடிகள் கூத்துக் கட்டுபவர்கள். கூத்துகள் இரவில் நடப்பவை. திருவிழாக்களில் முன்னிரவில் ஆடத்தொடங்கிய கூத்தினை விடிகாலை நேரத்தில் முடிப்பார்கள்.
அதனால் கூத்தாடிக் கொண்டிருப்பவர்கள் எப்போது விடியும் என்று கிழக்கு வானத்தினைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். கிழக்கே வெளுக்கத் தொடங்கியதும் கூத்தினை முடித்துக்கொள்வார்கள். அதனால் எப்போது விடியும் என்று கூத்தாடி கிழக்கே பார்ப்பான்.
கூலிக்கு வேலைக்கு வந்தவர்கள் காலையில் வேலையைத் தொடங்கி மாலையில் முடிப்பவர்கள். அவர்களுக்குப் பொழுது இறங்கினால்தான் வேலை முடியும். அதனால் எப்போது மாலை ஆகும், பொழுது இறங்கும் என்று மேற்கு வானத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அதனால்தான் கூலிக்காரன் மேற்கே பார்ப்பான் என்றார்கள்.
எப்போது வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லலாம் என்ற ஆர்வத்தில் கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.