மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 10 December 2018

சொர்க்கத்திற்கும், பூமிக்கும் இடையே தூரம் எவ்வளவு?

    

    நம்ம ஊர் தெனாலி ராமனைப் போல ஜெர்மெனியிலும் ஒரு குறும்புக்காரன் இருந்தான். படு புத்திசாலி!.... பெயர் டில்யூகல்ஸ்பீகல்!  (உச்சரிக்கவே கஷ்டமா இருக்குதா...ஓ.கே!... இனிமே "பீகல்' னு கூப்பிடுவோம்!..) 

      ஒரு முறை   பீகல் பான் என்கிற நகரத்திற்கு கல்லூரிப் படிப்புக்காக ஒரு பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்தான். பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் பீகலுடைய குறும்புத்தனம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தனர். எனவே அவனை புத்திசாலியல்ல என்று நிரூபிக்க முயன்றனர். 

      அதன் விளைவு நேர்முகத் தேர்வில்அவர்கள் பீகலிடம் "ஓ! மேதையே நீ எல்லாம் தெரிந்தவன்தான். ஆனாலும் , நாளை  நாங்கள் கேட்கும் ஆறு கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால் உன்னை அறிஞனென்று ஒத்துக்கொள்வோம். கல்லூரியிலும் சேர்த்துக் கொள்வோம்! இல்லாவிட்டால் இந்த நகரத்தை ஓடிப் போய்விட வேண்டும். சம்மதமா?'' பீகல் அவர்களது சவாலை ஏற்றுக் கொண்டான்.

       மறு நாள்   பல்கலைக்கழக மேடையின் நடுவே பீகல் நின்றான். முன் வரிசையிலிருந்த பேராசிரியர் முதல் கேள்வியைக் கணக்கு சம்பந்தமாகத் 
தொடுத்தார். 


""உலகின் முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும் இறந்து எத்தனை நாளாகின்றன?'' 

""ஏழு நாட்கள் மட்டும் தான் ஆகின்றன!...'' என்று   பதில் சொன்னான் பீகல். 

""அதெப்படி? இது தவறான பதில்!...'' என்றார் கேள்வி கேட்டவர்.

   அதற்கு பீகல் சிரித்தவாறே, ""ஐயா! ஆதாம் ஏவாள் இறந்த பிறகு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு நாட்கள் தானே மீண்டும் மீண்டும் வருகின்றன. புதிதாக எந்த நாளும் வரவில்லையே?'' என்றான். 

இந்த பதிலை எதிர்பாராத எல்லோரும் கைத்தட்டினர்.

எரிச்சலடைந்த இன்னொரு ஆசிரியர் கோபத்துடன், ""உலகத்தின் நடுப்பகுதி எங்குள்ளது?''

உடனே பீகல், ""இதோ நான் நிற்கும் இடம் தான் உலகின் நடுப்பகுதி!'' 

""நீ நிற்கும் இடம் தான் உலகின் நடுப்பகுதி என்று உன்னால் நிரூபிக்க முடியுமா?'' 

""நான் நிற்கும் இடம் உலகின் நடுப்பகுதி இல்லையென்று உங்களால் நிரூபிக்க முடியுமா?'' என்று திருப்பிக் கேட்டான் பீகல்!
கேள்விக் கேட்டவர் திகைக்தார்! 

அடுத்தக் கேள்வி இன்னொருவரிடமிருந்து வந்தது. 

""சொர்க்கத்திற்கும், பூமிக்கும் இடையே   தூரம் எவ்வளவு?''

     பீகல் "சொர்க்கம் மிக அருகில் உள்ளது. நாம் பேசுவதை சொர்க்கத்திலுள்ளோர் கேட்குமளவிற்கு நெருக்கமாயுள்ளது'.

பேராசிரியர் இதை மறுத்தார் "இதனை   நம்ப முடியாது. நீ நிரூபித்துக் காட்ட வேண்டும்'.

"நான் நிரூபிக்கிறேன். நீங்கள் முதலில் சொர்க்கத்திற்குச் செல்லுங்கள். அப்போது, நாங்கள் இங்குப் பேசுவதைக் காது குளிரக் கேட்கலாம்'

பாவம் பேராசிரியர். அவரால் எப்படி சொர்க்கம் செல்ல முடியும்?

"கடலில் காணப்படும் தண்ணீரின் மொத்த அளவு என்ன?' இது இன்னொருவரது கேள்வி. இதற்குக் கூசாமல் "கடலில் இருபது பில்லியன் குப்பிகள் அளவிற்குத் தண்ணீர் உள்ளது' என பதிலுரைத்தான் பீகல். உடனே கேள்விகேட்டவர்   எழுந்து, பொய் சொல்கிறாய் என்றார். அதற்கு பீகல், "நான் என்ன செய்வது? இன்று காலையில்   அளந்துப் பார்த்த போது அந்த அளவிற்குத் தான் கடல் தண்ணீர் இருந்தது. சந்தேகமிருந்தால் நீங்கள் அளந்து பாருங்கள்' இதைக் கேட்டதும் பேராசிரியர்கள் அமைதியாயினர்.   

   எல்லோரும் ஒன்றைப் புரிந்துக் கொண்டனர். அவனிடமிருந்து குதர்க்கமான கேள்விக்குக் குதர்க்கமான பதில்தான் வரும். அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டதோடு பீகலைப் பாராட்டி அவனுடைய மேல் படிப்புக்கு உதவியும்  செய்தனர்

Pages