சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!
'என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்.. இன்பம், துன்பம் எது வந்தாலும், மன அமைதியை மட்டும் இழந்து விடாதே..!"
ஏ.ஆர்.ரகுமான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 1967ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார்.
இவர் 1992ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம் மூலம் இசைத்துறையில் அறிமுகமானார். இவருக்கு முதல் படமே தேசிய விருதை பெற்றுத் தந்தது.
இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான ஆஸ்கார் விருதை 2009ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது.
இவர் பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷண், இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தமிழக திரைப்பட விருது, மலேசிய விருது, கோல்டன் குளோப் விருது, கிராமிய விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
கபில் தேவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 1959ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சண்டிகரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் கபில் தேவ் ராம்லால் நிகஞ்ச்.
இவருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக காணப்பட்டது. பிறகு ஹரியானா அணியின் நிரந்தர ஆட்டக்காரரானார். தொடர்ந்து இரானி டிராஃபி, துலீப் டிராஃபி உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று ஆல்ரவுண்டராக முத்திரை பதித்தார்.
இவரது தலைமையிலான இந்திய அணி 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
பின்பு ஆதரவற்றோர் மேம்பாட்டிற்காக குஷி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சாதனைகளை கௌரவித்து இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற இவருக்கு லெப்டினென்ட் கர்னல் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.
முக்கிய நிகழ்வுகள்
1883ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகத்திறன் கொண்ட கலீல் ஜிப்ரான் பிறந்தார்.
1852ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கிய லூயி பிரெயில் மறைந்தார்.
1884ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் மறைந்தார்.
1936ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி கலாஷேத்திரா, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.