மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 15 January 2019

தென் மாவட்டங்களில் கடவுளாக வணங்கப்படும் பென்னி குவிக் பிறந்த தினம் இன்று..(சனவரி 15)

    பென்னி குவிக் பிறப்பால் இந்தியர்தான். இவர் 1841 ஜனவரி15ல் புனேயில் பிறந்தார். 

    இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் பெற்றார். நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.

     மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.

    முல்லை மற்றும் பெரியாறை இணைத்து, அணை கட்ட ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

    ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குவிக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.

     அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளை பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு சிரமத்திற்கிடையே அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.

     அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குவிக் இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

      தென் மாவட்டங்களில் பென்னி குவிக் என்பது வெறும் பெயரல்ல, தமிழக மக்களின் வணக்கத்துக்குரிய ஒரு காவல் தெய்வத்தின் பெயர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்தவர்களை சாமிக்கு சமமாக வைத்துப் போற்றும் மதுரை மண், அந்த மண்ணுக்காக தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஒரு வெள்ளைக்காரரை குலம் தழைக்க வரம் கொடுத்த சாமியாகவே மதித்து பொங்கல் வைத்து கும்பிடுகின்றனர்.

Pages