மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள பொறுப்பாளர்களையும் போலீசார் கைது செய்தனர். சிலரை போலீசார் விடுவித்த பிறகு, நிர்வாகிகள் வீடுகளுக்குச் சென்று விட்டனர்.
அவ்வாறு சென்ற நிர்வாகிகளையும் போலீசார் வீடு தேடிச் சென்று கைது செய்தனர். அவர்களை தொடர்ந்து, மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் உள்ள தலைவர்கள், பொறுப்பாளர்களையும் கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நபர்களின் பெயர் பட்டியல் தயார் செய்தனர். அவர்களை நிற்க வைத்து போட்டோவும் எடுத்தனர். பின்னர் அவர்களை கைது செய்து, இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வேலூர், திருவள்ளூர், திண்டுக்கல், சென்னை ஆகிய இடங்களில் நிர்வாகிகளை விடுவிக்கக் கோரி சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போலீசார் எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். நிர்வாகிகளை போலீசார் விடுவிக்க மறுத்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியதால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் 6 பேர் ஜாமீனில் விடுதலை: திருச்சியில் கைது செய்யப்பட்ட 6 பேரை மாஜிஸ்திரேட் முன் போலீசார் நேற்று இரவு ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட் 6 பேரையும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது 143, 290, 341, 353 மற்றும் சென்னை மாநகர போலீஸ் சட்டப்பிரிவு 41 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 143(சட்டவிரோதமாக கூடுதல்), 290(அரசு ஊழியர்கள் செல்வதை கேட்காமல் இருத்தல், 341(அரசு ஊழியரை தடுத்தல்), 353(அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல், 7(1)(ஏ)சிஎல்(பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துதல், சாலை மறியல் செய்தல்) மற்றும் சென்னை மாநகர சட்டப்பிரிவு 41(5 பேருக்கு மேல் கூடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.