மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 12 January 2019

வீட்டுப்பாடமும் _ வல்லபாய் படேலும்


       அந்த, சிறுவனுக்கு இன்று ஆசிரியரிடம் தண்டனை பெறப் போகிறோம் என்பது உறுதியாக தெரிந்து விட்டது.


      அவர் குஜராத்தி மொழிப் பாடத்தின் ஆசிரியர்தான். இருந்தாலும் மாணவர்களின் கை உடையும் அளவிற்கு வீட்டுப்பாடம் கொடுப்பதில் அவருக்கு ஆனந்தம். எனவே சம்பந்தமே இல்லாமல் வாய்ப்பாடுகளை மூன்று முறை எழுதி வாருங்கள் என்றும் ஐந்து முறை எழுதி வாருங்கள் என்றும் வீட்டுப்பாடம் கொடுப்பார். அப்படி எழுதி வராத மாணவர்களை மறுநாள் வகுப்பில் தண்டிப்பதில் அவருக்கு பேரானந்தம்.


   துருதுருவென்று எப்பொழுதும் விளையாடிக் கொண்டே இருக்கும் அந்த சிறுவனுக்கு வீட்டுப்பாடம் செய்வது பெரும் கசப்பாக இருந்தது. எப்படியாவது இந்த துன்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினான். ஆனால் முடியவில்லை! வீட்டுப்பாடம் எழுதாமல் தூங்கிவிட்டான் நேற்று.


      இன்று காலை பள்ளி தொடங்கி விட்டது முதல் பிரிவு குஜராத்தி மொழி பாடம்தான். எல்லா மாணவர்களும் வீட்டுப்பாடம் எழுதி இருந்தனர். இவன் ஒருவனை தவிர! வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்தவுடன் எழுந்து நின்று அனைவரும் வணக்கம் கூறினர். பதில் வணக்கம் கூறியபோதும் ஆசிரியரின் கண்கள் மாணவர்களின் கையில் இருந்த வீட்டுப்பாட நோட்டுப் புத்தகத்தின் மீதே இருந்தது. இவன் கையில் மட்டும் நோட்டு புத்தகம் இல்லை அவனை அழைத்தார்.

"வாய்ப்பாடு எழுதிக் கொண்டு வந்தாயா?' என்று கேட்டார்.


       மாணவர்கள் அனைவரும் அவன் என்ன கூற போகிறான் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவன் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்தது அவர்கள் அனைவருக்கும் தெரியும்.

        "கொண்டு வந்தேன் அய்யா! ஆனால் வாசல் வரை வந்த அது தப்பி ஓடிவிட்டது!' என்றான் சிறுவன்.


      வகுப்பில் இருந்த அத்தனை மாணவர்களும் சிரித்தனர். மிகவும் கோபமாய் அவனை தண்டிக்க தயாராக இருந்த ஆசிரியரும் கொல்லென்று சிரித்து விட்டார்.


    காரணம் "காடே' என்ற குஜராத்தி மொழி சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருந்தன. ஒன்று வாய்ப்பாடு! மற்றொன்று கன்று குட்டி!


    அவனது மொழி புலமையை அறிந்து கொண்ட ஆசிரியர் அவனை வெகுவாக பாராட்டினார் மேலும் தன் தவறை உணர்ந்து கொண்டு மாணவர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் வீட்டுப் பாடங்கள் அதிகமாக கொடுப்பதை குறைத்துக்கொண்டார். இப்படியாக இப்படியாக மாணவர்களிடம் அந்தச் சிறுவன் பிரபலமானான். அவனை பள்ளியில் அனைவரும் "காடே' என்று செல்லமாக அழைத்தனர். 


    அச்சிறுவன் தான் பின்னாளில் "இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் ஆவார்.

Pages