கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும் புதிய மருந்தை உருவாக்கி இருக்கிறார்கள் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
பெண் கொசுக்களில் காணப்படும் ஒரு வகைப் புரதம்தான் இனப்பெருக்கத்துக்கு அவசியமான அம்சம். பெண் கொசுக்களில் இந்தப் புரதத்தை ஊசி மூலம் அகற்றி ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், இதன் விளைவால் முட்டையின் கருக்கள் அழிந்துவிடுவதைக் கண்டறிந்து இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து கொசுக்களில் இந்தப் புரதத்தை நீக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் பணியிலும் இறங்கியிருக்கிறார்கள். குறிப்பாகக் கொசுக்களை மட்டும் அழிக்கக் கூடியதாகவும், தேனி உள்ளிட்ட பிற பூச்சிவகைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாததாகவும் இந்த மருந்தைத் தயாரித்து வருவதாகவும் சொல்கிறார்கள். அதேசமயம், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதல்ல தங்கள் நோக்கம்; எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதே என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கொசு ஒரு மகரந்தப் பரப்பி என்பது குறிப்பிடத்தக்கது!