ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினர்.
அப்போது செய்தியாளர்கயிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அடுத்தாண்டு முதல் ஒன்று முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய வண்ண யூனிபார்ம் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பாடப்புத்தகம் முதல் 14 பொருட்களையும் அரசு வழங்கும். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
10 ஆண்டுகளாக பிளஸ்-2 மாணவர்கள் படித்து வந்த பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாட திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு 80,000 ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் வரும் ஜனவரி 21ம் தேதி முதல் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் செயல்படவுள்ளன. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை. அதற்கு பதிலாக, அரசு தொடக்கப்பள்ளி, ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் உபரி ஆசிரியர்கள் அங்கன்வாடிகளுக்கு மாற்றம் செய்யப்படுவர். ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. ஆசிரியர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அத்தனை நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.