ஒரு மனிதன் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான். அந்த சமயம் புலி ஒன்று அவனை பார்த்து துரத்த ஆரம்பித்தது. அவன் உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான். அவனுக்கு அந்த மரத்தில் வசித்த குரங்கு ஒன்று இடமளித்தது. அவன் பசியையும் தீர்க்க பழங்களைப் பறித்து கொடுத்தது.
மரத்தின் கீழே பசியோடு இருந்த புலி குரங்கிடம் 'குரங்கே அந்த மனிதனை நீ கீழே தள்ளு, நான் பசியில் உள்ளேன்" என்றது. ஆனால் குரங்கோ இவன் என்னை நம்பி வந்தவன். அதனால் தள்ள மாட்டேன். நம்மை நம்பியவர்க்கு துரோகம் செய்யக்கூடாது என மறுத்தது.
பிறகு குரங்கு தூங்க ஆரம்பித்தது. அப்போது புலி மனிதனைப் பார் த்து, எவ்வளவு நேரமானாலும் சரி, நான் இங்கிருந்து போகமாட்டேன், ஏனென்றால் நான் மிகவும் பசியாக இருக்கிறேன் என்றது. நீ அந்த குரங்கை கீழே தள்ளி விட்டால் நான் அதை சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து சென்று விடுவேன் என்றது. உடனே அந்த மனிதன், தூங்கும் குரங்கை தள்ளி விட்டான். மனிதன் குரங்கை தள்ளிவிட்டவுடன், குரங்கு வேறு ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தப்பிவிட்டது.
அது மனிதனைப் பார்த்துச் சொன்னது, 'நம்பிக்கை துரோகத்தைப் போல் மோசமானது ஒன்றும் கிடையாது.." நீ என்னை நம்பி வந்ததால் நான் உன்னை தண்டிக்க மாட்டேன் என்று சொல்லி, வேறு மரத்திற்கு தாவி ஓடிவிட்டது.