வேலூர்க் கோட்டை, 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. இக்கோட்டை வேலூருக்கு இன்றும் அழகும் பெருமையும் சேர்க்கின்றது. இது தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூரில் அமைந்துள்ளது. சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் கலைநயத்துடன் வேலூரின் மையப்பகுதியில் இந்த வரலாற்றுச்சின்னம் பெருமையுடன் வீற்றிருக்கிறது.
வரலாறு :
நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக்கோட்டை கைமாறியது. இந்தியா விடுதலை பெறும்வரை இக்கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது.
திப்பு சுல்தானின் குடும்பம் மற்றும் ஸ்ரீலங்காவின் கடைசி மன்னரான ஸ்ரீ விக்ரமா ராஜசின்ஹா கோட்டையில் சிறைச்சாலைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள்.
பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக்கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே.
சிறப்புகள் :
இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது.
இந்த கோட்டையானது தென்னிந்தியாவின் இராணுவ கட்டமைப்பின் சிறந்த இடமாக கருதப்படுகிறது.
சிப்பாய் கலகம் எனும் முதல் இந்திய சுதந்திர போராட்ட எழுச்சி இந்த வேலூர் கோட்டையில்தான் நிகழ்ந்தது.
கோட்டையின் தென்பகுதியில் பசுமையான பூங்கா ஒன்று அமைந்துள்ளது. தென்மேற்குப் பகுதியில் எழில்மிக்க தூண்களாலும், சிற்பங்களாலும் ஆக்கப்பட்ட அழகிய மண்டபம் உள்ளது.
கோட்டையின் உச்சியில் தேசியகொடி ஏற்ற 100 அடி கொடிமரம் அமைத்துள்ளனர்.
நுழைவாயிலின் இடது புறத்தில் உள்ள சிற்பத்தின் கலை, கட்டிடக்கலை வல்லுநர்களால் பாராட்டப்பட்ட ஒரு தலைசிறந்த கலை.
வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட மணிக்கூண்டு இன்று நகரின் மையத்தில் காய்கனி அங்காடியின் நுழைவாயிலாகக் காட்சியளிக்கின்றது.
இங்கு திப்புசுல்தான் வாரிசுகள் பயன்படுத்திய நாணயங்கள், வாள்கள், ஓடுகள், மண்பானைகள், கல்வெட்டுகள், செப்பு தகடுகள், கத்திகள், பீங்கன் கிண்ணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
காவல்துறை பயிற்சி கல்லூரி, வட்டாச்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் என பல அரசு அலுவலகங்கள் உள்ளே இயங்குகின்றன.
ஜலகண்டேஷ்வரர் கோயில், மசூதி, தேவாலயம், புகழ்பெற்ற வேலூர் கிறிஸ்டியன் மருத்துவமனை, பள்ளிவாசல் மற்றும் மாநில அரசு அருங்காட்சியகம் போன்றவை இந்த கோட்டை வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
கோட்டைக்குள் திப்பு மகால், ஹைதர் மகால், பாஷா மகால், கண்டி மகால், பேகம் மகால் ஆகிய அழகிய அரண்மனைகளும் காணப்படுகின்றன.
மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச கோட்டை காட்சி தருகின்றது.