அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஆறு வயது சிறுவனாக இருந்தபோது அவருக்கு ஒரு சின்ன கோடாலி கிடைத்தது.
அவர் அந்தக் கோடாரியால் தோட்டத்திலுள்ள செடிகளையும், மரங்களையும் வெட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்தத் தோட்டத்தில் அபூர்வமான செர்ரி மரம் இருந்தது. அந்த மரம் அவரது அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான மரம். வாஷிங்டன் விளையாட்டு சுபாவத்தில் தன் கோடரியால் அந்த மரத்தின் அடிப்பாகத்தில் வெட்டினார். மரம் வாடிவிட்டது!
வாஷிங்டனின் தந்தை தனது பிரியமான மரத்திற்கு ஏற்பட்ட கதியை கண்டு வருந்தினார். வாஷிங்டனிடம், ""ஜார்ஜ்!.... எனது செர்ரி மரத்தை வெட்டியது யார் என்று உனக்குத் தெரியுமா?...'' என்று கேட்டார்.
ஜார்ஜ் வாஷிங்டன் திகைப்புற்று நின்றார். "தெரியாது' என்று சொல்லலாமா என்றும் நினைத்தார். மறு நிமிடமே, ""அப்பா!.... நான் பொய் சொல்ல மாட்டேன்!... ''என்று கத்திவிட்டு, ""நான்தான் உங்கள் பிரியமான மரத்தை வெட்டியவன்.... மன்னியுங்கள்!....'' என்றார்.
ஜார்ஜின் தந்தைக்குக் கோபம் தணிந்தது! மகனை அன்போடு அணைத்தார். ""என் அருமை மகனே!.... இப்படித்தான் நீ அஞ்சாமல் உண்மையைச் சொல்ல வேண்டும்!.... நீ உண்மையைப் பேசியதால் உன் தவற்றை மன்னிக்க எனக்கு மனம் வருகிறது! எப்போதும் உண்மை பேசுவதே உயர்வானது!....இனி மரங்களை வெட்டாதே!....'' என்றார்.
பயம் தெளிந்த ஜார்ஜ் ""சரி அப்பா!'' என்றான் தந்தையைக் கட்டிக்கொண்டு!