சர்வதேச தாய்மொழி நாள் என்று பிப்ரவரி 21-ம் தேதியை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக ஆக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படுகிறது.
வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பொது மாநாட்டின் 30ஆவது அமர்வில் இந்நாள் அனைத்துலக தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டது.
பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நிகழ்வுகள்:
1804 - நீராவியால் இயங்கிய முதல் ரெயில் வேல்சில் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது.
1848 - கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.
1907 - நெதர்லாந்தில் எஸ்.எஸ். பேர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
1937 - முதலாவது பறக்கும் விமானம் வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.
1960 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
1963 - லிபியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1965 - மால்கம் எக்ஸ் நியூயார்க் நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1972 - சோவியத்தின் லூனா-20 சந்திரனில் இறங்கியது.
1974 - சூயஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இஸ்ரேலியப் படைகள் வெளியேறின.
2013 - இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.