ஜாகீர் உசேன்
இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.
இவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். ஆதாரக் கல்வி முறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் 'குடியரசு" நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்திற்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார்.
1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பீகார் மாநில ஆளுநராகப் பதவியேற்றார். 1962ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராகவும், 1967ஆம் ஆண்டு இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்" என்று கூறியவர்.
இவருக்கு பத்ம விபூஷண் விருதும் (1954), பாரத ரத்னா விருதும் (1963) வழங்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகீர் உசேன் தனது 72வது வயதில் (1969) மறைந்தார்.
திமீத்ரி மெண்டெலீவ்
தனிம வரிசை அட்டவணையின் தந்தை என அழைக்கப்படும் திமீத்ரி மெண்டெலீவ் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பிறந்தார்.
இவர் வேதியியலின் தத்துவங்கள் (1868-1870) என்ற நூலை எழுதினார். பிறகு வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக் கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்.
இதனை மார்ச் 6ஆம் தேதி 1869ஆம் ஆண்டு ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார். மேலும் அந்த அட்டவணையில் பல கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை எதிர்வு குறி கொண்டு அட்டவணையை முழுமைப்படுத்தி இருந்தார்.
தனிமங்களின் இயல்புகளை வரையறுத்து குறிப்பிடத்தக்க சாதனையை செய்த மெண்டெலீவ் தனது 72வது வயதில் (1907) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1924ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி மரண தண்டனைகளுக்கு நச்சு வாயுவை பயன்படுத்தும் முறையை முதல் முறையாக அமெரிக்கா, நெவாடாவில் அறிமுகப்படுத்தியது.
1971ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி நாஸ்டாக் என்ற அமெரிக்க பங்குச்சந்தை குறியீடு முதல்முறையாக தொடங்கப்பட்டது.