அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் C .N.அண்ணாதுரை அவர்கள் (காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை) 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
இவரது 'நல்ல தம்பி" என்ற கதை 1948ஆம் ஆண்டு திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இவரது சொல்லாற்றலும், எழுத்தாற்றலும், அடுக்குமொழியில் மடைதிறந்தாற்போல் மணிக்கணக்கில் பேசும் அளவுக்கு இனிமையாக இருந்தது.
இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் (தி.க) சேர்ந்தார். பிறகு தி.க.வில் இருந்து விலகி 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.
இவர் 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கொள்கையை கொண்டவர். மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். 1965ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றது. அதன் விளைவாக, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினராகவும் (1962) மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகவும் (1967) தேர்ந்தெடுக்கப்பட்டார். மதராஸ் மாநிலம் என்ற பெயரை 'தமிழ்நாடு" என மாற்றினார்.
இவர் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி சென்னையில் மறைந்தார். அண்ணா அவரின் மறைவிற்கு பின், இவரது பெயரால் 'அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்" (அதிமுக) என்ற ஒரு கட்சி எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் 1972ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இவருடைய இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.