கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் .கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு .
தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய இவர் கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார் . அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களை தமிழ்படுத்தினார். எடுத்துக்காட்டாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றினார். இதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார் .
தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கி வந்த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை இயற்றினார் .தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதினார் .அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத்தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் அவர் .தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார் .இவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி அலைந்ததால் ‘சுவடி தேடிய சாமியார்’ எனப்பெயர் பெற்றார் தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.
பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போர்த்துக்கீய அகராதியை உருவாக்கினார். தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி “ஆ, ஏ” எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.