ஒருமுறை பீர்பாலுக்கும் பேரரசருக்கும் சண்டை ஏற்பட்டது. பீர்பால் 'அரண்மனைக்கு இனி ஒரு போதும் திரும்பி வர மாட்டேன்" என்று கூறி அரண்மனையை விட்டு வெளியேறினார்.
சிறிது நாட்களுக்கு பிறகு, பீர்பால் அரண்மனையில் இல்லாததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார் அக்பர், பீர்பால் அரண்மனைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று எண்ணினார். ஆனால் யாருக்கும் பீர்பால் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
பிறகு பேரரசருக்கு ஒரு யோசனை வந்தது. அவர் பின்வரும் நிபந்தனைகளைப் பின்பற்றி அரண்மனைக்கு வரக்கூடிய நபருக்கு 1000 தங்க நாணயங்களைப் பரிசாக வழங்க முடிவு செய்தார். அந்த நிபந்தனை என்னவென்றால் 'மனிதன் ஒருவன் குடை இல்லாமல் வெயிலில் நடக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் அவன் நிழலில் இருக்க வேண்டும்" என்பது தான் அந்த நிபந்தனை. இதை கேட்ட அந்த பேரரசு மக்கள் இது முடியாத காரியம் என்று கூறினார்கள்.
பின்னர் ஒரு கிராமவாசி தலையில் கயிற்று கட்டிலை சுமந்து வந்து பரிசை வாங்கிக் கொண்டு 'நான் வெயிலில் நடந்தேன், அதே நேரத்தில் நான் கட்டில் கயிற்றின் நிழலில் இருந்தேன்" என்று பதிலளித்தான்.
விசாரணையின் போது அந்த கிராமவாசி அவருடன் வாழும் ஒரு மனிதர் தான் இந்த கருத்தை தெரிவித்ததாக ஒப்புக்கொண்டார். இதைக் கேட்ட பேரரசர் 'இது கண்டிப்பாக பீர்பால் ஆக தான் இருக்க வேண்டும்!" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பின்னர் பேரரசர் கிராமவாசியுடன் சென்று, பீர்பாலை மீண்டும் அரண்மனைக்கு திரும்பி வருமாறு அழைத்தார். பீர்பாலும் பேரரசரின் வேண்டுகோளை ஏற்று அரண்மனைக்கு திரும்பி வந்தார்.