அமெரிக்காவில் நண்பர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார் விவேகானந்தர்.
அங்கு வழியில் இருந்த கால்ஃப் விளையாட்டு மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. ஒரு சிறிய குழியில் தூரத்திலிருந்து பந்தைச் சரியாக அந்தக் குழியில் விழவைக்க வேண்டும். அதுதான் போட்டியின் விதி.
விவேகானந்தருக்கு போட்டியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. 'ஒவ்வொருவருக்கும் நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும்" என்று சொல்லப்பட்டது. 'எனக்கு ஒரேயொரு வாய்ப்பு போதும்" என்றார் விவேகானந்தர்.
அருகிலிருந்த நண்பர், 'இது முடியாது" என்றார். ஆனால், விவேகானந்தர், ஒரு வாய்ப்பிலேயே பந்தைக் குழிக்குள் சரியாக செலுத்திவிட்டார். அவருக்குப் பரிசு கிடைத்தது.
அவருடைய நண்பர், 'எப்படி இது உங்களால் முடிந்தது" எனக் கேட்டார். அதற்கு விவேகானந்தர் 'கிடைக்கும் வாய்ப்பை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். திறமைகளை செயலில் காட்ட வேண்டும். பயன்பாடுகளை நினைத்துக்கொள்ள வேண்டும்" என்று பதிலளித்தார்.
எவருக்கும், வாய்ப்புகள் என்பது வாசற்கதவுகளை தட்டிக் கொண்டிருப்பதில்லை... ஆனால், வாய்ப்பு வரும் பட்சத்தில் அதனை அவர்கள் துணிவுடன் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சம்பவங்களே உதாரணம்.
பலவீனத்தோடு வாழ்ந்த இளைஞர்களிடம், 'பலமே வாழ்க்கை... பலவீனமே மரணம்" என்று நம்பிக்கை விதைகளை விதைத்தார், விவேகானந்தர்.