1. இந்நூலுக்கு நறுந்தொகை என்றொரு பெயருண்டு. 'நறுந் தொகை' என்பதற்கு, நல்ல கருத்துகள் அடங்கியவை என்று பொருள். இதை எழுதியவர், பிற்காலப் பாண்டிய அரசர்களில் ஒருவர். நீதிக்கருத்துகள் அடங்கிய நூல். ஓரடி முதல் ஆறடி வரை மொத்தம் 82 பாடல்கள் இந்நூலில் உள்ளன. நூல் எழுதியவரின் அண்ணன், வரதுங்கராமபாண்டியர். அண்ணனின் மனைவியாரும் தமிழ் அறிந்தவர். இந்நூலாசிரியர், நைடதம், கூர்மப்புராணம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
யார் இவர், இவர் எழுதிய
நூலின் பெயர் என்ன?
2 இதற்கு நெடுந்தொகை என்றொரு பெயரும் உண்டு. இந்த நூலைத் தொகுத்தவர் உப்பூரிக்கிழார் மகனார் உருத்திரசன்மனார். நிதியுதவி செய்து தொகுக்கச் சொன்னவர், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்று இதிலுள்ள பாடல்கள், களிற்றியானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என்னும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தொகுக்கப்பட்ட இந்நூலில் சிறிய பாடல் 13 வரிகளையும், பெரிய பாடல் 31 வரிகளையும் கொண்டது. அனைத்தும் அகத்தை (மனத்தை) மையமாக வைத்துத் தொகுக்கப்பட்டது. 400 பாடல்களைக் கொண்டது.
அது எந்த நூல்?
விடை
1. அதிவீரராம பாண்டியர். எழுதிய நூல் 'வெற்றி வேற்கை'
2. அகநானூறு. பல புலவர்கள் எழுதியது.