சாக்லேட் உற்பத்தியில் சுவிஸ் நாடு முதலிடம் வகிக்கிறது. சுவிட்சர்லாந்து, அது தயாரிக்கும் சாக்லேட்டை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் பெறுகிறது.
பிரெஞ்சு நாட்டின் மாவீரன் நெப்போலியன் எங்கு எப்போது படையெடுத்துச் சென்றாலும், தன்னுடன் சாக்லேட் டப்பாக்களை மறக்காமல் எடுத்துச் செல்வார். அவை தனக்கு அதிகப் புத்துணர்ச்சியையும், சக்தியையும் தருவதாகத் தன் நண்பர்களிடம் கூறுவாராம். எட்மன்ட் ஹிலாரி எவரஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி வெற்றிக் கொடி நாட்டிய போது கூட, தன்னுடன் சாக்லேட் கட்டிகளை எடுத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். 1763-ஆம் ஆண்டில்தான் முதன் முதலாக சாக்லேட் புகழ் பெற ஆரம்பித்தது. சாக்லேட் விற்பனையினால் தங்களின் பீர், மற்றும் மது வகைகளின் விற்பனை அதிகம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் சாக்லேட் உற்பத்தியையும், விற்பனையையும் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்க மது வியாபாரிகள் அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தி வந்தார்கள்.
'தியோப்ரோமா" என்ற கோகோ மரம் தான் சாக்லேட் தயாரிப்புக்கான மூலப் பொருளை அளித்து வருகிறது. இந்த மரம் ஐவேரிகோஸ்ட், நைஜீரியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது. இந்த மரம் சாதாரணமாக பதினெட்டு மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. ஆண்டுக்குப் பத்தாயிரம் பூக்கள் பூத்து, கொட்டைகளைத் தரக் கூடிய திறன் வாய்ந்தது. தொடர்ந்து நாற்பதாண்டுகளுக்கு கொட்டைகள் தரும்.
சாக்லேட்டில் பாலும் சர்க்கரையும் சேர்ந்த பின் அதன் சுவை அதிகமாகிறது. இதில் கார்போஹைட்ரெட், புரோட்டின், தயமின், ரிபோப்லேவின், கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
அக்காலத்தில் 'கொடிவா" சாக்லேட் நிறுவனத்தினர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாக்லேட் தேவைப்படும் போதெல்லாம், ஒரு குதிரை மீது நன்கு சவாரி செய்யக்கூடிய அழகான பெண்களைக் கொண்டு அவரவர்கள் வீட்டுக்கே சாக்லேட்டுகளைக் கொண்டு போய்க் கொடுக்கும் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
நியூயார்க் நகரில் 'மில்டன் சீல்மென்" என்பவர் ஒரு சாக்லேட் பிரியர். அவர் சாக்லேட்டின் பெருமைகளை விளக்குவதற்காக 'சாக்லேட் நியூஸ்" என்னும் பெயரில் மாதம் இருமுறை வெளியாகும் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தார். இப்பத்திரிகை முழுவதும் சாக்லேட் மணம் வீசும்படிச் செய்திருந்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏழாயிரம் மெட்ரிக் டன் சாக்லேட் உற்பத்தியாகிறது. 1957-ஆம் ஆண்டில் முதன் முதலில் காட்பரீஸ் நிறுவனத்தார்தான் சாக்லேட் தயாரிப்பில் இறங்கினர். பின், 1970-ல் அமுல் பால் நிறுவனத்தாரும் சாக்லேட் தயாரிப்பில் இறங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.