மாணவர்கள் வருடம் முழுவதும் படித்த பாடங்களை நினைவில் கொள்வது தான் இனி அவசியம். புதியதாக பாடத்தை படிக்க போதிய அவகாசமும் மாணவர்களிடம் இல்லை.
படித்த பாடங்களை திருப்புவதல் செய்வதற்கு மட்டுமே போதிய அவகாசம் உள்ளது. ஆகையால், மாணவர்கள் இனி படிப்பில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
பயம் தேவையில்லை :
துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்ற மூன்றும் எவர் கையிலிருந்தாலும் அவருக்கு வெற்றி நிச்சயம். வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணமாகும். படிப்பு மற்றும் தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது ஒரு நீண்ட பயணத்தின் சிறு பகுதியாகும்.
எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும் மனதில் நிற்காமல் மறந்து போகிறதே?
இவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி படித்து முடிப்பது?
என்னதான் எழுதினாலும் முழுமையான மதிப்பெண் கிடைப்பதில்லையே ஏன்? இதுபோன்ற இன்னும் பல பிரச்சனைகள் மாணவர்களின் மனதில் எழும்.
தீர்வுகள் என்ன?
தேர்வில் வெற்றி பெறுவதோ, அதிக மதிப்பெண்களைப் பெறுவதோ, முதல் மாணவனாக வருவதோ கடினமான ஒரு காரியமல்ல.
ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற முதலில் புரிந்துகொள்ள வேண்டியது பாடத்திட்டத்தைத்தான். ஒவ்வொரு பாடநூலிலும் எத்தனை பாடங்கள், என்னென்ன பாடங்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பாடத்திட்டத்தை சரியாகப் புரிந்து கொண்டதும் தனது கால அளவிற்கேற்ப பாடங்களைப் பிரித்துப் படிப்பதற்கு வசதியாக நேரத்தை திட்டமிட வேண்டும்.
முயற்சியும் பயிற்சியும் தேவை :
பயிற்சியின் மூலம் எதையும் சாதிக்க முடியும். பொதுவாக மனப்பாடப் பகுதிகளை குறிப்பெடுத்து வைத்து, ஓய்விருக்கும் போதெல்லாம் அதனை எடுத்துப் பார்த்துக் கொள்வது விரைவில் மனப்பாடம் செய்திட உதவும்.
ஆங்கில வினா விடைகள், தமிழ் செய்யுள் பகுதி, பாடங்களிலுள்ள வினாக்களுக்கான விடைகளில் வரும் தலைப்புகள், துணைத் தலைப்புகள் ஆகியவற்றைப் படிப்பதற்கு இந்த முறையைப் பின்பற்றலாம்.
முழு மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாட ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அடிக்கடி சந்தேகங்களை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.
படிக்கும் முறை :
படிக்கும் இடமும், நேரமும் மிகமிக இன்றியமையாதது. படிப்பதற்கு வீட்டில் தனியாக வசதியான அறை இல்லாவிட்டால் பகல்வேளைகளில் இயற்கையான தோட்டம், வயல்வெளிக்கு சென்று தனிமையில் படிக்கலாம். கணிதம் போன்ற பாடங்களை நண்பர்களுடன் நேரத்தை வீணாக்காமல் கலந்துரையாடி படிப்பது நல்லது.
பொதுவாக வாய்விட்டு படிக்க வேண்டும். இல்லையேல் ல, ள, ர, ற, ன, ந, ண உச்சரிப்புப் பிரச்சனை ஏற்பட்டு தேர்வுத்தாளிலும் அவை தவறாகவே பதிவாகிவிடும்.
படித்தவற்றை தனக்குத்தானே எழுதிப் பார்த்து, திருத்தி பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது.