மனித மூளையின் இடது பக்கம் கணக்கு, சீர்தூக்கிப் பார்த்தல், தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்தல், கற்றல் உள்ளிட்ட செயல்பாடுகளையும், வலது பக்க மூளையானது, உள்ளுணர்வு, கற்பனை, கலைநயம், இசை, காட்சிகள் வாயிலாகச் சிந்தித்தல், மனிதநேயம், அன்பு போன்ற உணர்வுப் பூர்வமான செயல்பாடு களையும் கட்டுப்படுத்தும். இந்த, இரண்டு பக்க மூளையும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே, ஒரு காரியத்தை அறிவுப் பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் செய்ய முடியும். இதற்கு, ஆக்கினை முத்திரை உதவுகிறது.
செய்முறை :
நாற்காலியிலோ, விரிப்பிலோ அமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும். இதை, ஒருநாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த ஆசனத்தை செய்து வரலாம்.
பலன்கள் :
மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.
இரண்டு பக்க மூளைக்கும் உள்ள சக்தி ஓட்டம், பரிமாற்றம் சீராகிறது. அதனால், சிந்தனை வளம் அதிகமாகிறது. குழந்தைகள் படிப்பில் மட்டும் அல்லாது விளையாட்டு உட்பட மற்ற எக்ஸ்ட்ராகரிக்குலர் ஆக்டிவிட்டிஸிலும் வெற்றி பெறுவர்.
அதிகமாக மூளைக்கு வேலை தருபவர்கள், பன்முகச் செயல்பாடுகள் (Multitasking) செய்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய முத்திரை.
கண் பார்வை, காது கேட்கும் திறன், மூக்கால் நுகரும் திறன், சுவையறிதல், தொடு உணர்வு ஆகிய ஐம்புலன்களின் செயல்பாடுகளும் கூர்மையாகின்றன.