ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.
தேவையற்ற விஷயங்களிலும், வீண் வதந்திகளிலும் மனதை அலட்டிக் கொள்வதால் நம் ஆற்றல் சிதறி வீணாகிறது. எப்போதும் ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள்.
ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும்.
மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும்.
லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழுங்கள்.
வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.

உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. 'நான் ஒரு வெற்றி வீரன்" என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.
'என்னிடம் நாட்டுப்பற்று மிக்க 100 இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்".
இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.
மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.
வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதையே உனது கடமையாக்கிக் கொள்.