நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நாம் படிக்கும்போது, அந்த தலைவர்கள் அத்தனை பேருக்கும் பின்னணியில் ஒரு உண்மையான உந்து சக்தியாக இருந்தவர் யார் என்றால், அவர் வேறு யாருமில்லை - சுவாமி விவேகானந்தர்தான்.
19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த சமய தலைவர்களுள் ஒருவர். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்து சமயத்தை வளர்த்தவர்.
சிக்காக்கோ சர்வசமய மாநாட்டில், அன்பு சகோதரர்/சகோதரிகளே...!! என்று தனது உரையை ஆரம்பித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர். மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதை உரக்கக் கூறியவர்.
இப்பூவுலகில் அதர்மம் தலைதூக்காமல் இருக்கவும், தர்மத்தின் மீதான பற்றுதல் அதிகரிக்கவும் அவ்வப்போது மகான்கள் சிலர் தோன்றி மறைகிறார்கள். அதுபோன்ற மிகச்சிறந்த மகான்களில், இந்தியா மற்றும் இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் தூக்கி நிறுத்தியவர்தான் இந்த மகான்.
அந்நிய ஆட்சியின் அடிமைத்தனத்திலிருந்து நாடு விடுதலை பெற சிங்கம் போல கர்ஜித்தவர். பாரதத்தின் ஆன்மாவை தட்டி எழுப்பியவர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருண்டு கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்காகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார்.
இவரது ஆணித்தரமான முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.
 சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்கியவர். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்" மற்றும் ஸ்ரீ 'ராமகிருஷ்ண மிஷன்" போன்ற அமைப்புகளையும் நிறுவியவர்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் அவதாரமாகத் திகழ்ந்தவர்.
பெரும் சமூக சீர்திருத்தவாதியாகவும், தத்துவவாதியாகவும், சிந்தனையாளராகவும் மற்றும் இந்திய இளைஞர்களுக்கான துடிப்புச் சின்னமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ஆம் தேதி ஆண்டுதோறும் நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.