சுதந்திர போராட்ட வீரர்கள் என்றாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது மஹாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், கட்டபொம்மன், பகத்சிங் போன்றவர்கள் தான். அந்த வகையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஒருவர் சந்திர சேகர் ஆசாத்.
சந்திர சேகர் ஆசாத் மத்திய பிரதேசத்தில் உள்ள பாவ்ராவில் ஜூலை 20 ,1906 அன்று பிறந்தார். இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் புரட்சியாளராக கருதப்படுகிறார். இவரின் வீரம் பிரிட்டிஷ் அரசை நடுங்க வைக்கும் அளவிற்கு இருந்தது. காவல் துறையினர் கைது செய்து ரத்தம் சொட்ட சொட்ட அடித்துக்கொண்டிருக்கும் போது கூட ”பாரத மாதாவிற்கு பெருமை உண்டாகட்டும்” என முழக்கமிட்ட வீரர் ஆசாத்.
15 வயதிலே புரட்சிகரமான போரட்டங்களில் ஈடுபட்டார். முதல் போராட்டத்திலே பிரிட்டிஷ் அரசாங்கம் ஆசாத்தை கைது செய்தது. அதன்பிறகு தன் இயற் பெயரான சந்திரசேகர சீதாராம் திவாரியை , “சந்திர சேகர் ஆசாத்” என மாற்றிக்கொண்டார். ஆசாத் என்றால் விடுதலை எனப் பொருள்.
ஆசாத்தின் தாயாருக்கு, அவர் சமஸ்கிருதம் பயின்று அறிஞர் ஆக வேண்டும் என்பதே ஆசை. ஆனால் ஆசாத் 15 வயதிலே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். அதற்காக பிரிட்டிஷ் அரசு ஆசாத்தை கைது செய்தது.
முதல்முறை இவரை நீதிமன்றத்தில் விசாரித்தப் போது தனது பெயர் “ஆசாத்” எனவும், தன் தந்தை பெயர் “சுவந்திரதா” எனவும், தன் முகவரி “சிறை” எனவும் கூறினார்.
1925ல் நடைப்பெற்ற கக்கோரி ரயில் கொள்ளை மற்றும் 1928ல் நடைப்பெற்ற துணை மேற்ப்பார்வையாளர் சாண்டர்ஸ் கொலை ஆகிய சம்பவங்களுக்கு பிறகு இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். லாலா லாஜ்பட் ராய் இறப்பிற்கு பிறகு பகத்சிங் இவருடன் இணைந்தார். இருவரும் இணைந்து பல புரட்சிகரமான செயல்களை செய்துள்ளனர்.
தன் கட்சிக்கு வரும் பணத்தை நாட்டிற்காக மட்டுமே பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியவர் ஆசாத். மேலும் , பிரிட்டிஷ் காவல் துறையினர் தன்னை உயிருடன் பிடிக்க முடியாது என்ற உறுதிமொழியையும் எடுத்தார்.
1931ல் சந்திர சேகர் ஆசாத் அலகாபத்தில் உள்ள ஆல்ஃப்ரட் பூங்காவில் சுக்தேவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது பிரிட்டிஷ் காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது சுக்தேவ் தப்பிக்க உதவி செய்துவிட்டு, காவல் துறையினரிடம் உயிருடன் பிடிப்படக்கூடாது என்பதற்காக தன்னை தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்தார் ஆசாத். அவர் மறைந்த தினம் இன்று (பிப். 27) .