மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 10 February 2019

பென்சில் தோன்றிய வரலாறு


            பேனா எழுத மட்டும்தான் பயன்படுகிறது. ஆனால், பென்சில் எழுத மட்டுமின்றி, சித்திரங்கள் வரையவும், வரைபடங்களை வடிவியலில் (கிராப்) போடவும் பென்சில் அவசியம். 


         கிராபைட் எனும் கனிமம் கொண்டு தயாரிக்கப்படுவது, பென்சில். இந்த பென்சில் தயாரிப்பு பல ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. ஜெர்மானியக் குடும்பம் ஒன்று கிராபைட்டைக் கொண்டு 1760 - ல் பென்சில் தயாரிப்பில் இறங்கியது. ஆனால், முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. 1795 - ல் கண்டே என்பவர் கிராபைட்டுடன் களிமண்ணைச் சேர்த்து, இந்தக் கலவையை சன்னமான குச்சிகளாகச் செய்து, உலை அடுப்பில் காயவைத்தார். இந்தக் குச்சிகளால் செய்யப்பட்ட பென்சில்கள் விரைவிலேயே பிரபலமாயின. இன்றளவும் பென்சில் செய்ய இந்த முறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

       உலர்ந்த கிராபைட்டும் களிமண்ணும் சேர்ந்த கலவையை இயந்திரத்தில் ஏற்றி சன்னமான குச்சிகளாக உருட்டப்படுகிறது. இந்தக் குச்சியை உலையடுப்பில் காயவைத்து உறுதியாக்குகிறார்கள் பென்சிலின் வெளிப்பகுதி தனியே செய்யப்படுகிறது.

        பைன் மரத்தின் தடியை ஒரே சீரான இரு கூறாக வெட்டிக் கொண்டு நடுவில் கிராபைட் லெட்டைப் பொருத்தும் வகையில் தடமிட்டுக் கொள்கிறார்கள். பின்பு லெட்டை இந்தத் தடத்தில் பொருத்தி, மரக் குச்சியின் இரு கூறுகளையும் கோந்தால் ஒட்டுகிறார்கள். அதன் பின், வேண்டிய அளவில் வெட்டி பாலிஷ் செய்கிறார்கள். இதோ, பென்சில் தயாராகி விட்டது. 

        இன்று வெவ்வேறு பயன்பாட்டுக்காக 350 - க்கும் மேற்பட்ட ரகங்களில் பென்சில்கள் உள்ளன. கண்ணாடி, பிளாஸ்டிக் ஆகியவற்றின் மீது எழுதப் பயன்படும் பென்சில்களும் கிடைக்கும். பொறியியல்துறையின் சிறப்பான தேவைகளுக்கு ஏற்ற தனி ரகப் பென்சில்களும் உருவாக்கப்படுகின்றன. இவற்றால் பதிக்கப்படும் கோடுகளும், எழுத்துகளும் நீண்ட காலம் வரை மங்காமல் இருக்கும்.

Pages