ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குயவன் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் ஒரு கழுதை இருந்தது. தினமும் அவருடைய கழுதை மண்ணை அவரது வயலில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும். வயல் மிகவும் தூரத்திலிருந்ததால், அவர் செல்லும் வழியில் ஒரு மரத்தின் கீழே தனது கழுதையை கட்டி விட்டு அங்கே ஓய்வெடுப்பார்.
ஒரு நாள் தன்னுடையை கழுதையை கட்ட பயன்படுத்தும் கயிற்றை எடுக்க மறந்து விட்டார். அவர் அந்த மரத்தை அடைந்த போது, இன்று நான் எப்படி கழுதையை மரத்தில் கட்டுவேன், நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது கழுதை ஓடி விடுமோ.. என்று யோசித்தார். பிறகு குயவன் கழுதையின் காதை பிடித்துக் கொண்டு நாம் தூங்கலாம், காதை பிடித்துக் கொண்டால் கழுதையால் ஓட முடியாது என்று முடிவெடுத்தார்.
அந்த வழியாக சென்ற ஒரு துறவி, கழுதையின் காதுகளை பிடித்துக் கொண்டு குயவன் தூங்குவதை கண்டார். குயவனுக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்துக் கொள்ள விரும்பினார். குயவன் என்ன பிரச்சனை என்பதை கூற, துறவியோ கழுதையை தினமும் கட்டிப் போடும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், கற்பனையான கயிற்றை பயன்படுத்தி அதனை கட்டுவது போல் நடியுங்கள். கழுதை அங்கிருந்து ஓடாது என்று நான் உறுதியளிக்கிறேன் என்று கூற, குயவனும் துறவி கூறியது போல் செய்தார்.
அவர் கழுதையை விட்டுவிட்டு தூங்கச் சென்றார். அவர் எழுந்திருக்கும் போது, கழுதை அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். வீட்டிற்குச் செல்ல குயவன் திட்டமிட்ட போது, கழுதை அந்த இடத்தை விட்டு நகரவில்லை. குழப்பமடைந்த குயவன் மீண்டும் அந்த துறவியை சந்தித்தார். துறவியிடம் ஓடிச் சென்று கழுதையின் நடத்தையை கூறினார். துறவி நீங்கள் கழுதையை கட்டினீர்கள், ஆனால் நீங்கள் அந்த கட்டை அவிழ்க்கவில்லை சரியா? என்று கேட்டார். நீங்கள் அங்கு சென்று கழுதையை கட்டியிருந்த கயிறு அவிழ்ப்பது போல் நடியுங்கள் என்றார், குயவனும் துறவி கூறியது போலவே செய்தார்.
இப்போது கழுதை வீட்டிற்கு செல்ல தயாராக இருந்தது. குயவன் துறவியை பார்த்து நன்றி கூறி மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் சென்றான்.