பொறாமை கொள்ளாதே.
தருமன் என்ற ஒரு வியாபாரி இருந்தார். அவர் பெயர்தான் தருமன். ஆனால் அவர் யாருக்கும் மறந்தும் கூட உதவியேதும் செய்து விட மாட்டார். இத்தனைக்கும் அவர் செல்வமமற்ற ஏழையல்ல.. தங்கம் வெள்ளி வியாபாரம் செய்பவர்தான். அடிக்கடி அவர் வெளி ஊர்களுக்கும் சென்று வியாபாரம் செயது வருவார். வெளி ஊர்களுக்குச் செல்லும்போது தன மகன் தேவராஜை விட்டு வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவார். அவனும் அவரது வியாபாரத்தைக் கவனித்து வந்தான்.
ஒருமுறை அவர் கடையில் அமர்ந்திருக்கும் பொது ஒரு ஏழை அவரது கடைக்கு வந்தார். மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தார். வற்றிய உடலும் களைத்த முகமுமாகத் தெரிந்தார். பரிதாபமாக தளர்ந்தவராக அவரது கடையின் அருகில் வந்து நின்றார். அவரை சற்றும் சட்டை செய்யாமல் தன வியாபாரமே குறியாக இருந்தார் தருமன்.
"ஐயா...." இரண்டு முறை அழைத்தும் அவரைத் திரும்பிப் பார்க்காது அமர்ந்திருந்தார் தருமன்.
அப்போது அங்கு வந்த அவர் மகன் தேவராஜன் "அப்பா" என அழைத்தான்.
என்ன என்பது போல் அவனைப் பார்த்தார் தந்தை. "அப்பா, இந்தப் பெரியவர் வெகு நேரமாக அழைத்துக் கொண்டு இருக்கிறார். ஏனென்று கேளுங்கள்."
"எல்லாம் யாசகமாகத்தான் இருக்கும் நீ பேசாமல் உள்ளே வந்து வியாபாரத்தைக் கவனி."
"சரியப்பா" என்றபட உள்ளே வந்து அமர்ந்தான் தேவராஜ்.
ஸ்ரீஸ்ரீஅப்போது கடைக்கு ஒரு வாடிக்கையாளர் வந்தார். உள்ளே வந்து தனக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போதும் யாசகம் கேட்டு வந்த முதியவர் அங்கே நிற்பதைக் கண்டு "யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? வெகுநேரமாக நிற்கிறீர்கள் போல் தெரிகிறதே" என்றார் மென்மையாக.
"ஐயா, நான் ஒரு ஏழை. என்மகளுக்கு பல ஆண்டுகள் மாப்பிள்ளை தேடி இப்போதுதான் அமைந்திருக்கிறது. திருமாங்கல்யமும் புது ஆடை மட்டுமாவது வாங்க வேண்டும் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும். உங்களைப் போன்ற நல்லவர்கள் தருமங்களால்தான் அது நடக்கவேண்டும் அதனால்தான் ஐயாவைப் பார்க்க வந்தேன்." என்றார் பணிவோடு.
அப்போது கடையிலிருந்து வெளியே வந்த தருமன், "இவர்களையெல்லாம் நம்பாதீர்கள். பல பேர் இப்படித்தான் வருகிறார்கள் நீங்கள் ஒன்றும் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்." என்று நண்பரை வெளியே அனுப்பினார். கூடவே இங்கெல்லாம் நிற்காதீர். வேறு எவனாவது ஏமாளி இருக்கிறானா என்று பாருமய்யா." என்று அவரைத் துரத்தாத குறையாக விரட்டினார். தளர்ந்த நடையுடன் அவர் அவ்விடம் விட்டகன்றார்.
அவர் நடந்த களைப்பால் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அங்கே வந்த தருமனின் நண்பர் "ஐயா உங்களை பார்த்தால் ஏமாற்றுபவராகத் தெரியவில்லை. ஏதோ என்னால் முடிந்தது பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய பொட்டலத்தைக் கொடுத்தார். அதைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டவர் நீங்க மஹாராஜனாய் இருக்கணும் என்றார் கண்கள் கலங்க.
இதைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தருமன் தனக்குள் சினம் கொண்டார். "பிழைக்காத தெரியாத மனிதர். சரியாக ஏமாந்து விட்டார். எவ்வளவு சொல்லியும் அவனுக்கு உதவி செயகிறாரே. என்ன கொடுத்தாரோ என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். மிக சுலபமாக சம்பாதித்துக் கொண்டாரே இந்தக் கிழவர் என்று அவர் மனதுக்குள் பொறாமையும் எழுந்தது.
நாட்கள் நகர்ந்தன. தருமனுக்கு பொன் வெள்ளியை விட வைர வியாபாரம் செய்ய வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அதனால் ஒரு பெருந்தொகைக்காகத் தன வீட்டை அடமானமாக வைத்து பொருளை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். விலை குறைவாக நிறைய வைரம் வாங்க விரும்பி கப்பலில் வெளிநாடு சென்றார். பதினைந்து நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை. இதற்கிடையில் கடையில் இருந்த பொன்வெள்ளிப் பொருட்கள் எல்லாம் களவு போய் விட்டன. இப்போது பொருளை இழந்த மகன் தந்தைக்கு தகவல் சொல்லவும் வழியின்றித் தவித்தவாறு இருந்தான். தருமன் சென்ற கப்பல் புயலில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களை பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை எனும் செய்தி வந்தது.
இதையறிந்த கடன்காரர்கள் அவர்களின் வீட்டைப் பறித்துக் கொண்டு தருமன் மனைவியையும் மகனையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். தேவராஜ் தன தாயுடன் எங்கே செல்வது எனது தெரியாமல் நண்பர் ஒருவரின் இல்லத்தை அடைந்தனர். நல்ல நண்பர் அடைக்கலம் கொடுத்தார்.
கப்பலேறிக் கடற்பயணம் சென்ற தருமன் முதலானோர் புயலால் அலைக்கழிக்கப்பட்டு எங்கெங்கோ சென்று கரையருகே ஒரு கட்டுமரத்தைப் பிடித்துக் கரையேறினர். உயிர்பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று சொல்லுமளவுக்குத் துன்பத்தை அடைந்தனர்.
ஒரு வழியாகத் தன வீட்டை அடைந்த தருமன் தன் மனைவி மகன் இருக்கும் இடம் அடைந்து நடந்ததை எல்லாம் அறிந்து மிகுந்த துன்பமும் துயரமும் அடைந்தான். தன் மனைவி மகனுக்கு அடைக்கலமளித்த நண்பருக்கு நன்றி சொல்லி இன்று நிற்கவும் நிழலின்றி இருக்கும் தன நிலையைச் சொல்லி அழுதான்.
அப்போது அந்த நண்பர், அன்றொருநாள் ஒரு ஏழை உன்னிடம் எவ்வளவு கெஞ்சினான். நீ கூட என்னை எதுவும் உதவி செய்யாதே என்றாயே, இப்போது பார். உன் நிலையும் அதேபோல ஆயிற்று. இனியாவது யாருக்குமில்லையென்று சொல்லாதே அதுமட்டுமல்ல. கொடுப்பதையும் தடுக்காதே. உன்னால் முடிந்தால் கொடுப்பவர் இருக்குமிடத்தையாவது காட்டு. ஒரு ஏழைக்கு சாப்பாடு கிடைக்கும் என்று விதுரன் வீட்டைக் காட்டிக் கொடுத்ததனால் தன் விரலை வாயில் வைத்ததும் கர்ணனின் பசி அடங்கியது என்று மஹாபாரதக் கதை கேட்டதில்லையா?" என்று கூறக்கேட்ட தருமன் கண்ணீருடன் தலையசைத்து ஒப்புக் கொண்டான்.
அதன் பின் மனைவி மகனுடன் மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினான். ஆனால் எந்த ஏழைக்கும் இல்லையென்று சொல்வதுமில்லை, யாருக்கேனும் யாரேனும் தானம் செய்தால் அதைப் பார்த்து இனி பொறாமைப் படுவதும் இல்லை என முடிவு செயது கொண்டான் தருமன்.
அவன் மனம் அடிக்கடி வள்ளுவரின் திருக்குறளை நினைத்துக் கொண்டு அவனை எச்சரித்துக் கொண்டே இருந்தது.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
குறள் 166, அழுக்காறாமை.
பொருள்:
ஒருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவன், சுற்றத்தோடு உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெடுவான்.
நமக்கும் இது பாடம்தான்...