மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 11 November 2022

துணிவு சுவாமி விவேகானந்தர் வாழ்வில்..



       கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக் கொண்டிருந்தார்கள்.


     அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது.


     விஷயம் இதுதான் – நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடகமேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.


      அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது: மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீஸாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீஸாரே திடுக்கிட்டு விட்டனர்.


         அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூவினர். பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்துகொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு.


        பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.

Pages