கல்பனா சாவ்லா
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்-87ல் ஆறு வீரர்கள் கொண்ட குழுவுடன் முதல்முறையாக விண்வெளிக்கு சென்றார். இந்த விண்கலம் விண்வெளியில் 372 மணிநேரம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது.
மீண்டும் 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு சென்றனர். பிப்ரவரி 1ஆம் தேதி, பயணம் முடித்து விண்கலம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, விண்கலம் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.
வானத்தை வசப்படுத்திய கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசும், இந்திய அரசும் சாதனை புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.
சாய்னா நேவால்
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.
இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.
மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.
வால்டர் ருடால்ஃப் ஹெஸ்
மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற வால்டர் ருடால்ஃப் ஹெஸ் (Walter Rudolf Hess) 1881ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பிறந்தார்.
இவர் 1906ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்ற பிறகு, அறுவைசிகிச்சை நிபுணராகப் பயிற்சி பெற்றார். ரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மையை அளப்பதற்காக விஸ்கோசிமீட்டர் என்ற கருவியை உருவாக்கினார்.
மேலும், இவர் விழி விலகலின் அளவுகளைக் கண்டறிய உதவும் ஹெஸ் திரையை உருவாக்கினார். 1912ஆம் ஆண்டு கண் மருத்துவர் பணியை விட்டுவிட்டு ஜஸ்டஸ் காலே என்ற விஞ்ஞானியுடன் இணைந்து உடலியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
இவர் 1930களின் ஆரம்பத்தில் உள்ளுறுப்புகளை கட்டுப்படுத்தும் நடுமூளைப் பகுதியின் செயல்பாடு குறித்து பூனைகளைப் பயன்படுத்தி ஆராயத் தொடங்கினார். அது நியூரோ செக்ரியேஷன் (நரம்பு மண்டல கசிவுகள்) குறித்தப் புரிதல்களுக்கான முக்கிய கண்டுபிடிப்பாக திகழ்ந்தது.
இந்த கண்டுபிடிப்புக்காக இவர் 1949ஆம் ஆண்டு எகாஸ் மோனிஸ் என்பவருடன் இணைந்து மருத்துவம் மற்றும் உடலியலுக்கான நோபல் பரிசை வென்றார். உடலியல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அந்த துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய வால்டர் ருடால்ஃப் ஹெஸ் தனது 92வது வயதில் (1973) மறைந்தார்.