அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
நாம் அறிந்த விளக்கம் :
அரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும் திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது.
நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான். ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.
விளக்கம் :
அரப்படிச்சவன் என்பது வழக்கு மொழியில் மாறிப்போன வார்த்தையாகி விட்டது. அந்தப் பழமொழியின் சரியான வாக்கியம் அறம் படித்தவன் என்றிருக்க வேண்டும். அதாவது இலக்கிய நூல்கள் அல்லது வேதங்கள் சொல்லும் அறங்களை முழுமையாக கற்றவன் எல்லா வணிகமும் ஒழுங்காக செய்திட முடியாது. சில வியாபாரத்துக்கு சில நெளிவு சுளிவுகள் அறத்தைப் பொறுத்தவரை தவறாகப்படும்.
அதிகம் படித்த மேதாவி படித்து முடித்த பின் வணிகம் செய்ய நினைத்தான். அவன் சென்ற இடமோ தூத்துக்குடி. அங்கே மீன் வணிகம் செய்தால் பிழைக்கலாம். மீனைப் பிடிப்பதும் வெட்டுவதும் பாவம் என நினைத்தான். மீன் வியாபாரம் செய்யவில்லை. முத்து விற்க நினைத்தான். சிப்பிகளை கொன்றல்லவா முத்து எடுக்க வேண்டும். முத்து வியாபாரமும் செய்யவில்லை. உப்பு விற்கலாம் என்று நினைத்தான். உப்பளம் சென்று பார்க்கையில் ஆண்களும் பெண்களும் வெயிலில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் யாரையும் வருத்திப் பொருள் சேர்த்தல் பாவம் என்று ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இப்படியாக எண்ணும் மேதாவிகளுக்கு சொல்லப்பட்ட பழமொழியே இது