கல்வராயன் மலை விழுப்புரத்திலிருந்து ஏறத்தாழ 122கி.மீ தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து 46கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 289கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
பச்சை கம்பளம் போர்த்தியது போல் பச்சை பசேல் போன்று காட்சியளிக்கும் அழகிய மலை.
சாலையில் பயணிக்கும்போது சாலையின் ஓரத்தில் இருக்கும் அழகிய வயல்வெளிகள் கண்களுக்கு விருந்து.
கல்வராயன் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். ஓங்கி உயர்ந்த பச்சை பசும் மரங்களும், ஆர்ப்பரிக்கும் அருவிகளும், பறந்து திரியும் பறவைகளும், வன விலங்குகளும் காணப்படும் இடமாக உள்ள கல்வராயன் மலையை ஏழைகளின் மலைவாசத்தலம் என அழைக்கின்றனர்.
கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்குப்பகுதி 'சின்னக் கல்வராயன்" மற்றும் தெற்குப்பகுதி 'பெரிய கல்வராயன்" என்று குறிப்பிடப்படுகின்றது.
இந்த இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளது.
இங்குள்ள நீர்வீழ்ச்சிகளை காண்பதும், குளிப்பதும் சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தமாக உள்ளது. கல்வராயன் மலை செல்பவர்கள் கோமுகி அணையைப் பார்க்காமல் திரும்பமாட்டார்கள்.
ஏனென்றால் அங்கு குழந்தைகள் பூங்காவும், ஆற்றின் குறுக்கே தடுப்பணையும் அமைக்கப்பட்டு படகு குளம் உருவாகியுள்ளது.
இங்கு காட்டுப்பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளை பார்க்கும் அரிய வாய்ப்பும் கிடைக்கிறது. மலையின் மீது செல்லச் செல்ல சந்தன மரம், தேக்கு மரம் போன்றவற்றை காண முடியும்.