தமிழ்ப் பெயர்: காட்டுப் பக்கி
ஆங்கிலப் பெயர்: இந்தியன் ஜங்கிள் நைட்ஜார் (Indian jungle nightjar)
அறிவியல் பெயர்: கேப்ரிமல்கஸ் இண்டிகஸ் (Caprimulgus indicus)
குடும்பம்: பக்கி
வாழ்விடம்: உயரமான மலைப்பகுதி, சமவெளிக் காடுகள், மரங்கள்
காணப்படும் இடங்கள்: இந்தியா (காஷ்மீர், வடகிழக்குப் பகுதிகள் தவிர)
இரவுப் பறவைகளின் உலகத்தை, இரவில் செல்லும் காட்டுப் பயணத்தில்தான் அறிய முடியும். ஆந்தை, தவளை வாயன், தேவாங்கு, முள்ளம்பன்றி என பலவித உயிரினங்களைக் காணலாம். மரக்கிளையில் அல்லது புல்தரையில் உருவம் மறைத்து அமர்ந்திருப்பதுதான், காட்டுப் பக்கி. பகல்பொழுது முழுவதும், மரக்கிளையில் ஓய்வெடுக்கும்; இருட்டியதும் சிறு பூச்சிகளையும், வண்டுகளையும் வேட்டையாடி உண்ணும்.
உலகில் அனைத்து உயிரினங்களும் சரியான சமன்பாட்டில் இருக்க வேண்டும். ஒன்று இல்லை என்றாலும், மற்றொன்றுக்குப் பிரச்சினைதான். பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, பல்லுயிர்ப் பெருக்கத்தைச் சமநிலையில் வைக்க, பறவைகள் முக்கிய பங்காற்றுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 90க்கும் மேற்பட்ட காட்டுப் பக்கி வகைகள் உள்ளன. இந்தியாவில் 9 வகைகள் காணப்படுகின்றன; தமிழகத்தில், காட்டுப் பக்கி, நீண்டவால் பக்கி, சிறு பக்கி ஆகிய மூன்று வகைகள் உண்டு.