மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 6 March 2019

சிறகுகள் முளைத்த, உலகின் முதல் பெண் வாலண்டினா தெரஸ்கோவா!


      சாதிக்கும் எண்ணம் இருந்தால் சாதி, மதம், ஆண், பெண் என்கிற பாகுபாடு தடையாக இருக்காது என்பதை நிரூபித்தவர் ரஷியாவைச் சேர்ந்த வாலண்டினா தெரஸ்கோவா. விண்வெளியில் பயணித்த முதல் பெண்ணாகிய அவர், சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரி ஆவார். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி இங்கே காண்போம்..!

* ரஷியாவைச் சேர்ந்த வாலண்டினா தெரஸ்கோவா 1937-ல் பிறந்தார். இவரது முழுப்பெயர் வாலண்டினா விளாடிமிர்ரோவ்னா தெரஸ்கோவா. 1945-ம் ஆண்டு தொடங்கிய இவரது பள்ளிப் படிப்பு குறுகிய காலமே நீடித்தது. குடும்ப சூழ்நிலையின் காரணமாக தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அதன்பிறகு படிப்பில் ஆர்வம் கொண்டு, அஞ்சல் வழி மூலம் கல்வி கற்றார்.


* இவர் தனது இளம் வயதிலே பாராசூட்டிலிருந்து குதிப்பதற்கான பயிற்சி பெற்று 1959-ல் ஆகாயத்திலிருந்து குதித்தார். பாராசூட் மூலம் வானிலிருந்து குதிப்பதில் தனது தகுதியையும், திறமையும் நன்கு வளர்த்துக் கொண்ட வாலண்டினா, சோவியத் விண்வெளித் திட்டத்தில் தன்னார்வத் தொண்டராகச் சேர்ந்தார்.


* வாலண்டினா 'வோஸ்டாக் 6' என்ற விண்கலத்தில் 1963-ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார். பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை இவர் நிரூபித்துக் காட்டினார். விண்வெளியில் இருந்து கொண்டே பூமியின் அடிவானத்தையும், நட்சத்திரங்களையும் புகைப்படம் எடுத்தார். வளிமண்டலத்தில் உள்ள 'ஏரோசோல்'என்ற அடுக்குகள் (Aerosol layers) இவர் எடுத்த புகைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.


* இவர் விண்வெளியில் இருந்து கொண்டு பூமியை 48 முறை சுற்றி வந்தார். இதனால் முதல் விண்வெளி பயணத்திலேயே அதிகமுறை பூமியை வட்டமிட்டவர் என்ற சாதனையை படைத்தார். 


* முதல் பயணத்திலேயே விண்வெளியில் 12 லட்சம் மைல்கள் தூரம் அவர் பயணம் செய்தார். விண்வெளியில் 2 நாட்கள் 22 மணி 50 நிமிடங்கள் இருந்தார். அதாவது 70 மணி 50 நிமிடங்கள் இருந்தார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் விண்வெளியில் இருந்து கொண்டு பூமியைச் சுற்றினார். பெண்களாலும் ஆண்களுக்கு நிகராக விண்வெளியில் இருக்க முடியும் என்பதை முதன் முதலில் உலகிற்கு நிரூபித்துக் காட்டிய வாலண்டினா, 'உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்' என்ற பெயரையும், பட்டத்தையும் பெற்றார்.


* 1963-ம் ஆண்டு ஆண்ட்ரியன் நிக்கோலேயவ் (Andrian Nikolayev) என்ற விண்வெளி வீரரை வாலண்டினா திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சோவியத் விமானப்படையில் விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில் 1963 முதல் 1997 வரை பணிபுரிந்தார். ஏரோஸ்பேஸ் பொறியாளராகவும் விண்வெளித் திட்டத்தில் செயல்பட்டார்.


* வாலண்டினா விண்வெளி திட்டத்தில் தன்னார்வலராக இணைந்தபிறகுதான் விண்வெளி பற்றிய பொறியாளர் படிப்பை படித்தார். ஆராய்ச்சி யிலும் ஈடுபட்டார். இவர் தனது ஆராய்ச்சிப் படிப்பை 1977-ம் ஆண்டு முடித்து முனைவர் (Ph.D) பட்டம் பெற்றார். இவர் சோவியத் அரசில் ஒரு முக்கியப் புள்ளியாகவும் விளங்கினார்.


* வாலண்டினா பல்வேறு உயரிய விருதுகளையும், கவுரவ பட்டங்களையும் பெற்றுள்ளார். இவருக்கு ரஷியாவைத் தவிர உலகின் பல நாடுகளும் பரிசுகளையும், விருதுகளையும் வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. வாலண்டினாவிற்கு ஐ.நா. சபையின் அமைதிக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ரஷிய அரசு " Order of the Red Banner of”Labour” என்ற விருதை அறிவியல் சாதனைக்காக வழங்கி கவுரவித்துள்ளது.


* மங்கோலியா அரசு " Hero of Mongolia " என்கிற பட்டம் சூட்டி விருது வழங்கியது. வாலண்டினா பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். இவரின் பெயர் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பெண் சாதனையாளர் என்ற விருதை சர்வதேச பெண்கள் கழகம் இவருக்கு 2000-ல் வழங்கியது. இதுதவிர மேலும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவருக்கு எடின்பர்க் பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளன.


* வாலண்டினாவின் நினைவாக ரஷியாவில் பல தெருக்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. முதன் முதலில் விண்வெளிக்கு சென்று வந்த பெண்ணைப் பெருமைப் படுத்துவதற்காக நிலவில் உள்ள ஒரு பெருங்குழிக்கு 'தெரஸ்கோவா' எனப் பெயரிட்டனர். இவருக்கு வெள்ளிச் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.


* வாலண்டினாவை கவுரவப்படுத்தும் விதமாக ரஷியா அஞ்சல்தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டது. ரஷியா தவிர வேறு சில நாடுகளும் இவரின் உருவம் பொறித்த அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளன.


* இவரது வாழ்க்கை வரலாறு பற்றி பல புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளன. இவரது விண்வெளிப் பயணம் பற்றிய "Into that Silent Sea '' என்ற புத்தகம் 2007-ம் ஆண்டு வெளிவந்தது. இவர் 'விண்வெளியில் பெண்கள்' என்ற தலைப்பில் கட்டுரையும் எழுதியுள்ளார்.


* வாலண்டினா தற்போதும் ஒரு சாதனைப் பெண்ணாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது நாட்டின் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள சாதிக்க நினைக்கும் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்.


Pages