லோக்சபா தேர்தலில், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு, பி.டபிள்யூ.டி., என்ற புதிய மொபைல் செயலி, தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, சி.விஜில் என்ற செயலியும் தேர்தல் ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை, கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், தங்களது அடையாள அட்டை எண்ணை செயலியில் உள்ளீடு செய்து என்ன வகையான மாற்றுத்திறனாளி என்பதை பதிவு செய்ய வேண்டும். அதனடிப்படையில், ஓட்டுப் பதிவு நாளன்று, மூன்று சக்கர வாகனம் வழங்குதல் போன்ற உதவிகள் செய்யப்படவுள்ளன.
மேலும், தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக, பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், சி.விஜில் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையும் அதேபோன்று பதிவிறக்கம் செய்து, தங்கள் மொபைல் போன் எண்ணை உள்ளீடு செய்து, பதிவு செய்து கொள்ளலாம்.
அதன் பின், தேர்தல் விதிமீறல்கள் காணப்பட்டால், அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, இந்த செயலி மூலமாக பதிவேற்றலாம். இது சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 100 நிமிடங்களுக்குள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.