தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
போலியோ சொட்டு மருந்து
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம், 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்க வேண்டும்.
பஸ் நிலையங்கள்
சமீபத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்து வாழும் பெற்றோரின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும்.
மக்கள் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், விமான நிலையங்களில் 1,652 பயண வழி மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நடமாடும் குழுக்கள் மூலம் வசிக்கும் இடங்களுக்கே சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.